முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியிருக்கின்றார். நீதியை காப்பாற்றும் முயற்சியில் அவருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் மற்றும் ஆபத்துகள் காரணமாகவே அவர் வெளியேறியிருக்கின்றார். நீதித்துறையின் மீதான அச்சுறுத்தலை கண்டித்தே தமிழ் கட்சிகள் தங்களால் முடிந்த எதிர்வினைகளை ஆற்றியிருக்கின்றனர். ஆனால், இந்த எதிர்வினைகளில் பெருமளவான மக்களை
காணவில்லை – பெருமளவான மக்களை திரட்டக்கூடிய ஆற்றலுடன் எந்தவொரு தமிழ் தேசிய கட்சியும் இல்லையென்பதும் தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது. ஒவ்வொரு கட்சியும் மக்களை அணிதிரட்டியிருந்தால்கூட பெருமளவான மக்கள் இவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்குகொண்டிருக்க வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஒரு கேள்வி தவிர்க்க முடியாததாகின்றது. அதாவது, குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் – நீதியை காப்பாற்றும் முயற்சியில் தனது பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் நீதிபதி சரவணராஜா தான் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் இதுவரையில் பொதுவெளிகளில் தோன்றி தனது குரலை பதிவு செய்யவில்லை ஏன்?அவர் தற்போது நெருக்கடிகளற்ற பிறிதொரு சூழலில் இருக்கின்றார். அவரை முன்னிறுத்தியே தமிழ் கட்சிகள் செயல்படுகின்றன.
அவரின் தமிழ்பற்றுக்காக தலைவணங்குவதாக பலரும் பேசிவருகின்றனர். ஆனால், அவரோ நீதியை காப்பாற்றும் முயற்சிக்காக ஒரு தமிழ் நீதிபதி என்பதால் தான் எதிர்கொண்ட சவால்களை –
அச்சுறுத்தல்களை – அவமானங்களை சர்வதேச அரங்குகளில் ஆதாரபூர்வமாக முன்வைக்க வேண்டும் – ஆனால், அவர் அதற்கான சிறிய முயற்சியைக்கூட எடுத்ததாகத் தெரியவில்லை. அவருக்காக மற்றவர்களே பேசிக் கொண்டிருக்கின்றனர்.
யுத்தம் முடிவுற்று பதினான்கு வருடங்களாகிவிட்டன. இந்த பதினான்கு வருடங்களில் நீதி என்பதே தமிழ்த் தேசிய அரசியலின் இலக்காக முன்னிறுத்தப்பட்டது. அதற்கான இராஜதந்திர முயற்சிகளில் தாம் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவே அனைத்துத் தமிழ் கட்சிகளும் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டன. இதில் நாங்களே சரியானவர்கள் – நாங்கள் மட்டுமே சர்வதேச விசாரணையை முறையாகக் கோருகின்றோம் – மற்றவர்கள் போர் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என்றவாறு, கஜேந்திரகுமார் அணியினர் கூட்டமைப்பின் மற்றவர்கள் மீது கற்களை வீசினர் – ஆனால் கூட்டமைப்போ – தங்களுடைய செயல்பாடுகளின் காரணமாகவே ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயம்
தொடர்ந்தும் பேசு பொருளாக இருக்கின்றது – என்று வாதிட்டனர். ஆனால், பதினான்கு வருடங்களை திரும்பிப் பார்த்தால், தமிழ் மக்களுக்கான நீதி விடயத்தில் எவ்வித முன்னேற்றங்களையும் காண முடியவில்லை.
இவ்வாறானதொரு சூழலில் தான், ஒரு தமிழ் நீதிபதி நீதியை காப்பாற்ற முற்பட்ட போது, அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதான குற்றச்சாட்டு அரசியலாகியிருக்கின்றது. அடிப்படையில் இது ஒரு
முக்கியமான விடயம் – இலங்கையின் நீதித் துறைக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியில்லை என்பதை உரத்துப் பேசுவதற்கான ஒரு வலுவான ஆதாரம். ஆனால், சம்பந்தப்பட்ட நீதிபதியோ நாட்டைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து எதுவுமே பேசவில்லை. அவர் சர்வதேச அரங்குகளில் பேச வேண்டும். ஒருவேளை அவர் அமைதியாகவே இந்த விடயத்தை கடந்து சென்று தனது சொந்த வாழ்க்கைக்குள் முடங்கிப் போவாராயின் அவரை முன்வைத்து காண்பிக்கப்படும் எதிர்வினைகள் பெறுமதியற்றுப் போகலாம்.