ஜனாதிபதியின் கடந்த 07 ஆம் திகதி மட்டக்களப்பு விஜயம் பலர் மத்தியில் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. மயிலத்தமடு பண்ணையாளர்களின் போராட்டமும் அதற்கு எதிரான பிக்குவின் போராட்டமும் தங்கள் தங்கள் நியாயத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் ஜனாதிபதியின் மட் புனித மைக்கல் கல்லூரி விஜயத்தில் பலராலும் நோக்கப்பட பாடசாலைக்குள் நடந்த சம்பவம் அரசியல் ரீதியாக கேள்விகளை தொடுத்துள்ளது.
அவ்வாறான கேள்விகளை தொடுத்த சம்பவங்களை பார்க்கின்ற பொழுது மட் புனித மைக்கல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவுக்காக பாடசாலை வளாகத்துக்குள் நடந்த விழாவில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் பெயர் பொறிக்கப்பட்ட கதிரையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அமர்ந்திருந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த கதிரை விடயம் உண்மையில் என்ன கூற வருகின்றது ஏன்பதில் நிறைய விடயம் ஒளிந்திருக்கின்றது. அதாவது தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்காக ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் அவருக்கான அழைப்பு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது என்பதையே உறுதி பட கூறுகின்றது.
ஆனால் அவர் ஏன் ஜனாதிபதி பங்கு கொள்ளும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு பலரும் பல்வேறு விதமான பதில்களை தங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.அவர் மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சனைக்காக பாராளுமன்றத்துக்குள் போராட்டம் செய்தும் அதை கவனத்திலேயே கொள்ளாத ஜனாதிபதி வருகின்ற நிகழ்வில் தான் ஏன் கலந்து கொள்ளவேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்.அல்லது தமிழ் தேசிய கட்சிகளின் ஒரு முடிவான பொது நிகழ்வுகளில் சிங்கள அரசாங்கத்தினை நிராகரிப்பது என்கின்ற ஒரு முடிவில் கூட அவர் வராமல் இருந்திருக்கலாம். அல்லது அந்த நிகழ்விற்கு தான் வந்து, ஏதும் கதைக்க முற்பட்டு, அது ஏதும் பிரச்சனையாக மாறி நிகழ்விலே குழப்பத்தை ஏற்படுத்திவிடுவோமோ என்கின்ற ஐயப்பாடும் அவருக்குள்ளே இருந்திருக்கலாம்.
இவை அனைத்திற்கும் அப்பால் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் பிரசாந்தன் அமர்ந்திருந்தது இன்னொரு கேள்வியாக கேட்கப்படுகின்றது.பிரசாந்தன் போடுகாயாக அந்த இடத்தில் இருத்தி வைக்கப்பட்டாரா? அல்லது தான் சாணக்கியனின் இன்னொரு வடிவமென்பத்தை காட்டுவதற்காக அந்த கதிரையில் அமர்ந்திருந்தாரா?அல்லது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எதிர்காலத்தில் சாணக்கியனின் இடத்தை பிடிக்கும் என்பதை அவர் சொல்ல முற்படுகின்றாரா? என பல்வேறுவிதமான அபிப்பிராயங்கள் அந்த கூட்டத்தில் எழும்பியதை கேட்கக்கூடியதாக இருந்தது.
இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்த ஆசனத்தில் அமர்ந்து அடுத்த பாராளுமன்ற கதிரைக்கு
பிரசாந்தன் எடுத்து வைக்கும் ஒரு அடியாகவும் பார்க்கப்படுவதாக கூட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
மேலும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவிக்கையில், பிரசாந்தன் அவ்வாறுதான் சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்திருந்தார் என்றால் சாணக்கியனின் பெயரை அந்த கதிரையிலிருந்து எடுத்திருக்கலாம். ஆனால் அது தெளிவாக ஏனையோருக்கு தெரியும் வண்ணம் பிரசாந்தன் அமர்ந்திருந்தது சபை நாகரீகம் அற்ற செயலென பரவலாக கருத்து கூறப்பட்டது.
இதை ஒரு சாதாரண கதிரை விடயம் என்று நினைப்பதற்கு அப்பால் இவ்வாறான கதிரை விடயங்கள் தான் இலங்கை அரசியல் வரலாற்றிலே பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.