இஸ்ரேல்-ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகள் உயர்வடையக் கூடுமென பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சர்வதேச அளவில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கி இருக்கிறது. இது பொருளாதார மந்த நிலையில் நாடுகளை பெரிதும் பாதிக்கும்.
இந்த போரில் மத்திய கிழக்கு நாடுகள் இரண்டு பக்கங்களாக பிரிந்து நிற்கின்றன. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை எதிர்க்கும் சில நாடுகளும் ஆதரிக்கும் சில நாடுகளும் உள்ளன.
இந்த நாடுகள் அனைத்தும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் பிரதான நாடுகளாக உள்ளன. போரின் எதிரொலியால் விரைவாக எரிபொருள் விலைகள் உயர்வடையும் சாத்தியம் அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி கச்சா எண்ணெய் விலையில் 5 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் போர் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இஸ்ரேல் ஜனாதிபதி, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடனான போரை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக கூறியுள்ளதால் கச்சா எண்ணெய் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட கூடும் கூறும் பொருளாதார நிபுணர்கள், இலங்கையிலும் விரைவில் எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடந்த முதலாம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியிருந்தது.
அதன் பிரகாரம் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன் அதன் புதிய விலை 365 ரூபாவாகவும் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 420 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன், புதிய விலை 351 ரூபாவாகவும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 421 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இரஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரால் மீண்டும் எரிபொருள் விலைகள் இலங்கையில் உயர்வடையும் எனவும் இது இலங்கையின் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.