தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சினால் கிழக்கு மாகாணத்திற்கான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமார தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று (10) இடம் பெற்றது.
தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதிசன் ஆகியோர் விளக்கங்களை வழக்கியிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இரண்டு வயதுடைய குழந்தைகளின் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு தொழில் தேடி செய்வதனால் அந்நிய செலாவணி வருவாய் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் அவர்களின் குழந்தைகள் தாயினுடைய அரவணைப்பின்றி தனித்து வளரவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை எம்மால் பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும் இதனை குறைப்பதற்கான பல திட்டங்களை நாம் செயற்படுத்தி வருகின்றோம் என்றார்.
தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சின் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வு கூட்டத்திற்காக வருகை தந்த இராஜாங்க அமைச்சர் உத்தியோகத்தர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்தாலோசித்தார். மேற்குறித்த நிகழ்வில் மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் திரு.V. வாசுதேவன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.