கிழக்கு மாகாணத்தில் இன்னும் 10 ஆண்டுக்குள் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக பரந்துபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பு விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
இதை எவ்வாறு ஜனாதிபதி நடைறைப்படுத்த போகிறார் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களினால் கடந்த 08 ம் திகதி அன்று மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் பூங்கா ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சரின் உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் இது தொடர்பான காணொளி பதிவிடப்பட்டு அதில் “சவுக்கடியில் பூங்கா திறப்பு… பல மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பூங்கா திறந்து வைக்கப்பட்டது” என்று பதிவிடப்பட்டுள்ளது.
உண்மையில் இதே பூங்கா 2016 ஆண்டு அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு பூங்கா அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சின் கீழ் 14 மில்லியன் ரூபாய் நிதியிலும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களது ஏற்பாட்டில் நகர திட்டமிடல் , நீர் வழங்கல் உயர் கல்வி அமைச்சின் கீழ் 19 மில்லியன் ரூபாய் நிதியிலும் மொத்தமாக 33 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இப்பூங்கா நிர்மாணிக்கப்பட்டு,சவுக்கடி மௌலானா பீச் பார்க் என்னும் பெயரில் 2020 ஆண்டு திறந்துவைக்கப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் அமைச்சர் வியாழேந்திரன் பல மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இப்பூங்கா திறக்கப்பட்டுள்ளது என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் ஒரு வெளிப்படைத்தன்மை அற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இவற்றை பார்க்கின்ற பொழுது செய்யத் அலி ஸாஹிர் மௌலானாவினால் ஒரு பூங்காவும்,வியாழேந்திரன் எம்.பியினால் இன்னொரு பூங்காவும் திறந்துவைக்கப்பட்டதாகவே தெரியும்.
ஆனால் உண்மையில் ஒரே பூங்காவைத்தான் இருவரும் திறந்து வைத்துள்ளனர்.அப்படி என்றால் இதனுடைய அர்த்தம் என்ன என்ற கேள்விகள் ஏறாவூரை சேர்ந்த பலர் மத்தியிலே எழுந்துள்ளதோடு வெளிப்படைத்தன்மை என்ற விடயம் எந்த அளவிற்கு இவ்விடயத்தில் பேணப்பட்டுள்ளது என்று கேள்வி கேட்கின்றனர்.
இது தொடர்பாக ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இருவராலும் திறக்கப்பட்டது ஒரே பூங்காதான் என்றும், அலி சாஹிர் மௌலானாவினால் திறக்கப்பட பூங்கா திருத்த வேலைகள் செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனினால் திறந்து வைக்கப்பட்டது என்று அவர் கூறுகின்றார்.
இப் பூங்கா தொடர்பில் முகநூல் பக்கங்களில் வந்த செய்திகள் கீழே தரப்படுகின்றன.