இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், காணிகளைப் பகிர்ந்தளிக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய முள்ளிவட்டவான், வாகநேரி, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் இருந்து, வெளியேறுமாறு வன இலாகா திணைக்களத்தினர் அச்சுறுத்துவதாக பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த விடயம் தொடர்பாக, நேற்று (27) கிழக்கு ஊடகமன்றம் வாழைச்சேனையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகசந்திப்பின்போது, பாதிக்கப்பட்ட பயனாளிகளின் சார்பில் கலந்து கொண்டவர்கள் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தனர்.
அவர்கள் தொடர்ந்து கூறும்போது தெரிவித்ததாவது: 2022.06.16 ஆம் திகதி முள்ளிவட்டவான் கிராமத்தில் அரை ஏக்கர் அளவில் 17 பயனாளிகளுக்கு கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலாளர் மற்றும் செயலக காணி அதிகாரிகளும் நேரடியாக வந்து, காணிகளைப் பகிர்ந்தளித்ததுடன் ஆவணமும் வழங்கினர். காணிகளைத் துப்புரவு செய்து பயிர்ச் செய்கை நடவடிக்கையில் ஈடுபடும் போது, வன இலாகா அதிகாரிகள் வருகை தந்து, தங்களது கட்டுப்பாட்டில்உள்ள பிரதேசத்தில் எந்தவொரு பயிர்ச்செய்கை நடவடிக்கையையும் மேற்கொள்ளவேண்டாம் என கூறியதுடன் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கையும் எடுத்துள்ளனர். ஏழை மக்களாகிய நாங்கள், கஸ்ரப்பட்டு உழைத்த பணத்தை பயிர்ச்செய்கைக்கு செலவு செய்துள்ளோம். தற்போது பலனின்றிப் போகும் நிலையில் உள்ளது. நாங்கள் எந்த அதிகாரியின் கதையைக் கேட்பது என்று புரியாமல் உள்ளது. எனவே குறித்த விடயம் தொடர்பாக காணி வழங்கிய பிரதேச செயலக நிர்வாகத்திடம் நிலைமை தொடர்பாக தெரிவித்தபோதும் அவர்கள் பாராமுகமாக இருப்பது கவலையளிப்பதாக உள்ளது. எனவே, குறித்த இரு தரப்பினருடைய திணைக்களநிர்வாகச் சிக்கலில் நாங்கள் அகப்பட்டு அவஸ்தைப்படுகின்றோம். மேற்குறித்த விடயம் தொடர்பான நிலைமைகளை கவனத்தில் கொண்டு, எங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில், பயிர்ச் செய்கை நடவடிக்கையில் ஈடுபடக்கூடியவாறு தீர்வைப் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளனர்.