இலங்கைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்நிலைகாப்புச் சட்டம் மற்றும்புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கவலை கொண்டுள்ளது.
இந்த இரண்டு சட்ட மூலங்களும் அதிகாரிகளுக்கு விரிவான அதிகாரங்களை வழங்குவதாகவும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்காமல், மனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும்
மனித உரிமைகள் பேரவை வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா. நீண்டகாலமாக கவலையடைந்திருந்த நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தது.
மரண தண்டனையை நீக்குவது உட்பட சில நேர்மறையான திருத்தங்கள் வரைவில் செய்யப்பட்டிருந்தாலும், திருத்தப்பட்ட வரைவில் உள்ள பல விதிகளின் நோக்கம் மற்றும் பாரபட்சமான விளைவுகள் குறித்து கவலைகள் உள்ளன.
கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூ டுவதற்கான உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஐ.நா கவலை கொள்வதாகவும் கூறியுள்ளது.இந்த சட்டமூலத்தில் பயங்கரவாதம்
பற்றிய மிக விரிவான வரையறை உள்ளது மற்றும் போதிய நீதித்துறை மேற்பார்வையின்றி மக்களை தடுக்கவும், கேள்வி கேட்கவும், தேடவும், கைது செய்யவும், தடுத்துவைக்கவும் பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் பரந்த அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை பொறுத்தவரை, தகவல் தொடர்புகளை கடுமையாக ஒழுங்குபடுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும். மேலும் உடன்படாத வெளிப்பாடுகளை “தவறான அறிக்கைகள்” என்று முத்திரிரையிடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அதிகாரிகளுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குமென ஐ.நா. நம்புகிறது.
சட்டமூலத்தின் பல பிரிவுகள் தெளிவில்லாமல் வரையறைகளைக் கொண்டிருக்கின்றன.சிவில் சமூகம் மற்றும் சுயாதீன நிபுணர்களுடன் மேலும் அர்த்தமுள்ள ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு முழுமையாக இணங்குவதற்கு சட்ட வரைவில் கணிச மான திருத்தங்களைச் செய்யுமாறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.