கால்நடை பண்ணையாளர்களுக்கும் சட்டவிரோத குடியேற்ற வாசிகளுக்கும் சிறந்ததொரு தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்த நிலையில் அதற்கு எதிர் மாறாக நேற்றைய தினம் சிங்கள பேரினவாதத்தின் அத்துமீறிய அராஜகம் அரங்கேரியுள்ளது.
குறித்த அத்துமீறிய நடவடிக்கை தொடர்பாக சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தனது முகநூல் பதிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்-
அம்பிட்டிய சுமநரத்தின தேரரின் தலைமையில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத்தின் வழிநடத்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திபுல பெத்தான எனும் இடத்தில் புத்தரின் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.
அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தாங்கள் வழிபடுவதற்காகவும் தானம் வழங்குவதற்காகவும், புண்ணிய கருமங்களில் ஈடுபவதற்குமாக சிலை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் நிறுவப்பட்ட பெகர விகாரை என அழைக்கப்படும் விகாரையினை பாரியளவில் நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளன.
2015ம் ஆண்டு மாவட்ட அரசங்க அதிபர் சார்ல்ஸ், மற்றும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக அகற்றப்பட்ட அத்துமீறிய சிங்கள குடியேற்றமும் விகாரையும் நேற்றய தினம் மீளவும் வைக்கப்பட்டுள்ளது.
மயிலத்தமடு மேய்ச்சல் தரை நிலம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பண்ணையாளர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் அத்துமீறி அப்பகுதிகளில் தொடர்ந்தும் குடியேறிவரும் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாக புதிய புத்தர் சிலையை மயிலத்தமடுவில் வைக்கும் செயற்பாட்டில் மட்டக்களப்பில் வன்முறை செயற்பாடுகள் ஊடாக ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுவரும் அம்பிட்டிய சுமணரத்ன என்ற பௌத்த பிக்குவும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் ஆகியோர் மேற்கொண்டுள்ளதாக தமிழ் பண்ணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழர் பிரதேசத்தினை அத்துமீறி அடாத்தாக பிடித்ததுமட்டுமல்லாமல் புத்தர் சிலையினை வைத்து தமக்கு உரிமை கோரும் இந்த நாச காரியங்களை பார்த்துக்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? ச.வியாழேந்திரன், சி. சந்திரகாந்தன், கோ.கருணாகரன், இரா.சாணக்கியன் ஆகியோரின் கவனத்திற்கு! மட்டக்களப்பு மாவட்டத்தினை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்து மக்கள் பிரதிநிதிகள் ஆக்கினார்களே தவிர எமது நிலங்களை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரைவார்த்து கொடுக்க உங்களை தெரிவு செய்யவில்லை. மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த அத்துமீறல் செயலுக்கு உங்கள் கண்டங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களுக்கு நிரந்தர தீர்வினை பெற்று கொடுக்கும்படி பொது மக்கள் உங்களிடம் கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.
மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு Battinaatham ஊடகம் தனது எதிர்ப்பினையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
பிற்குறிப்பு; இது தொடர்பாக இன்றையதினம் (17.10.2023) அனைத்து கட்சிகள் சார்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டபோது ஜனாதிபதி உத்தரவாதமளித்தத்தின்படி சில தினங்கள் பொறுமையாக இருப்பதாகவும் அது நடைபெறாத பட்சத்தில் இதற்கு எதிரான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தீர்மானிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது. ஆனால் நிலைமையினை பார்க்கின்றபொழுது Battinaatham ஊடகம் ஏற்கனவே கூறிய கருத்தான ஜனாதிபதியின் உத்தரவு கிடப்பில் போடப்படுமா? என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறது.