நீண்டகாலமாக இலங்கையில் தீர்வு கிடைக்காத இரு இனங்களுக்கிடையிலான பாரிய பிரச்சனையாக மயிலத்தமடு, மாதவனை விவகாரம் காணப்படுகின்றது. இழுபறி நிலையில் காணப்படும் இந்த விவகாரத்தை நீதிமன்ற வழக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை கொண்டு சென்றிருந்தார்.
குறித்த இந்த வழக்கின் பிரகாரம் சட்டவிரோதமான முறையில் காணி அபகரிப்பு செய்து பயிர்செய்கையினை மேற்கொள்ளும் சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டும் என 2022.07.02 திகதி அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பினையும் வழங்கியிருந்தது. இவ் இணக்கப்பாட்டினை மட்டக்களப்பு உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு குறித்த தீர்ப்பினை அமுல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் நீதிமன்ற உத்தரவினையும் பொருட்படுத்தாத பெரும்பான்மை இனத்தவர்கள் குறித்த பிரதேசத்தின் பூர்விகவாசிகளான பண்ணையாளர்களுக்கும் அவர்களது உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கும் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மட்டுமல்லாமல் பிக்குவுடன் கூட்டு சேர்ந்து விகாரை அமைக்கும் பணியையும் முன்னெடுத்து வருவதாக கடந்த கால மட்டு ஊடகவியலாளர்களின் மயிலத்தமடு விஜயம் தெரிவித்திருந்தது.
இந்நிலையினால் தங்களுடைய அன்றாட வாழ்க்கையினை பல போராட்டங்களை மேற்கொண்டு முன்னெடுக்கவேண்டிய ஓர் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டவர்களாக மயிலத்தமடு, மாதவனை பிரதேச கால்நடை பண்ணையாளர்கள் உள்ளனர். இந்நிலை ஒருபுறமிருக்க குறித்த பிரச்சனைக்கு மக்கள் பிரதிநிதிகளாக இருந்து தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய அரசியல்வாதிகளே இதனை ஓர் வாய்ப்பாக பயன்படுத்தி தங்களுடைய தனிப்பட்ட அரசியல் வாழ்க்கைக்கு தீனி போடும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அந்தவகையில் மயிலத்தமடு மாதவனை விவகாரம் மாத்திரமன்றி காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், குருந்தூர்மலை விவகாரங்களில் தங்களது உரிமைகளுக்காக போராடும் தமிழ்த்தரப்பினரை இனவாதிகள் என பாராளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் கூறிவருகின்றார். சரத் வீர சேகர கூறும் இனவாதத்தை இப்பொழுது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அரசியல் ஆயுதமாக கையில் எடுத்திருக்கின்றாரா என்ற எண்ணப்பாடு தோன்றுகின்றது.
அண்மையில் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் விவகாரம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் கிழக்குமாகாண ஆளுநர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மகாவலி அதிகார சபையினர், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், இராணுவ பொறுப்பதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் . கலந்துரையாடலின் முடிவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு.சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் திரு. இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி இரு தினங்களுக்குள் தீர்வினை பெற்றுத் தருவதாக தெரிவித்தார் எனக் கூறியிருந்தனர். ஆனால் அவர்களினால் வழங்கப்பட்ட அனைத்து கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரணான விதத்தில் அமைந்திருந்தமை இங்கு பலராலும் அவதானிக்கப்பட்ட விடயமாக காணப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் திரு.சதாசிவம் வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில் மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் காணிகளை அடாத்தாக பிடித்துள்ள அம்பாறை, பொலநறுவையை சேர்ந்தவர்களுக்கு அவரர்களுடைய கிராமங்களிலே பயிர்செய்கையை மேற்கொள்ள காணிகளை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் சட்டவிரோதமாக காணி அபகரிப்பு செய்பவர்களை அப்புறப்படுத்துவதற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அதனை மகாவலி அதிகார சபையினரே அமுல்படுத்தவில்லை. குறித்த நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமுல்படுத்தும்படி மகாவலி அதிகார சபை, பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் இப்பிரச்சனையை ஒரு சில அரசியல்வாதிகள் ஓர் இனவாத பிரச்சனையாக்க முற்படுகின்றனர் எனவும் கூறியிருந்தார்.
அதேசமயம் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில், சட்டவிரோதமாக காணி அபகரிப்பு செய்பவர்களை அப்புறப்படுத்துமாறு கோரிக்கையினை முன்வைத்தோம், பொலிஸ் அதிகாரிகள் சென்று திடீரென அவர்களை அங்கிருந்து அகற்ற முடியாது, பொதுபாதுகாப்பு அல்லது பொது சொத்து அபகரிப்பு என்ற சட்டமூலங்களூடாக நீதிமன்ற உத்தரவினை பெற்ற பின்னரே அவர்களை அப்புறபடுத்தலாம் என ஜனாதிபதி கூறியிருந்தார் என தெரிவித்திருந்தார். அதே வேளை இராணுவத்தினர் உண்மைக்கு புறம்பான தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதாகவும் சட்டவிரோதமாக காணி அபகரிப்பு செய்தவர்கள் நீண்டகாலமாக குறித்த பகுதியில் வாழ்ந்து வருவதினால் அவர்களுக்கு அனுமதி வழங்குமாறு நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர், மகாவலி அதிகார சபை அதிகாரிகள், அரச அதிகாரிகள் போன்றோர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதாகவும் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் குறித்த அதிகாரிகள் வெளிநாட்டு முதலீடுகள், புதிய செயற்திட்டங்கள் என பல காரணங்களை கூறி ஜனாதிபதியின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குறித்த கலந்துரையாடலுக்கு மொழிபெயர்ப்பு வசதி இல்லாத காரணத்தினால் கூறப்பட்ட விடயங்களை விளங்கிக்கொள்ளவும் தங்களது கருத்துக்களை முன்வைக்கவும் பலர் சிரமப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இங்கு சாணக்கியனின் கூற்றுப்படி ஜனாதிபதி பண்ணையாளர்களுக்கு தீர்வு வழங்க தயாராக இருக்கிறார் என்று கூறினாலும் தமிழ் மக்களின் பேச்சை கேட்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்பது இந்த மொழி பெயர்ப்பு விடயத்தில் தெள்ளத் தெளிவாக விளங்கின்றது. ஒரு ஜனாதிபதிக்கோ அல்லது ஜனாதிபதியின் கீழ் உள்ள அரச ஊழியர்களுக்கோ தமிழ் தரப்பினருடனான கலந்துரையாடலிற்கு மொழிபெயர்பு சாதனம் முக்கியமானதாக தோன்றவில்லையா? ஒரு சமூகத்தினர் என்ன சொல்லுகின்றார்கள் என புரிந்துகொள்ளாமலும் அவர்களுடைய மொழிக்கான முக்கியத்துவத்தை உரிய முறையில் கொடுக்காமலும் இருப்பதானது அம்மக்கள் சார்ந்த பிரச்சனைகளில் எந்தளவிற்கு அரசாங்கத்திற்கு கரிசனை உள்ளது என்பதில் சந்தேகம் எழத்தோன்றுகின்றது. அதேசமயம் பாதிக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளையும் உரிமைகள் குறித்து பேசுபவர்களையும் இனவாதமாகவும் இனவாதியாகவும் காட்ட முற்படுவது அரசாங்கம் தற்போது மேற்கொண்டுவரும் தமிழர்களுக்கெதிரான அடக்கு முறையின் ஒரு வடிவமாகவே தெரிகின்றது. இதையே சதாசிவம் வியாழேந்திரன் எம்.பியும் மீண்டும் மீண்டும் கூறி நிற்கின்றபொழுது அவர் அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளுக்கு துணை போகின்ற ஒருவராகவே காணப்படுகின்றார். இது அவர் அரசியலுக்காக செய்கின்ற விடயமா அல்லது நன்றிக்கடனுக்காக செய்கின்ற விடயமா என்பது அவருக்குத்தான் தெரியும். ஆனால் பண்ணையாளர்களினுடைய விடயம் சரியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எல்லோருக்குமே ஒருமித்த கருத்தினை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இவ்வளவு தூரம் ஜனாதிபதிக்காக பரிந்து பேசும் வியாழேந்திரன் அந்த பொறுப்பை ஏற்பதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் முன்வருவாரா?