காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லை பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஏவுகணை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு கருதி லெபனானை ஒட்டிய இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் 28 நகரங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, டெல் அவிவ் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஈரானின் தூண்டுதலின்பேரில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள், பீரங்கிகள் குவிக்கப்பட்டு உள்ளன.
ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் தாக்குதலை லெபனான் அரசு தரப்பு தாக்குதலாகவே கருதுகிறோம். லெபனானுடன் நாங்கள் போரிட விரும்பவில்லை. அதேநேரம் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் லெபனானை அழித்துவிடுவோம்.இவ்வாறு டேனியல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேசமயம் காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு எதிரான போர்க்குற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் வரவிருக்கும் மணிநேரத்தில் எதிர்ப்பு முன்னணி முன்கூட்டிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹ_சைன் அமிரப்துல்லா ஹியன் எச்சரித்துள்ளார்.
அதோடு அங்குள்ள மக்கள் உணவும், நீரும் இன்றி அல்லப்பட்டு வருகின்றனர். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காஸாவுடனான எகிப்தின் எல்லையில் நிவாரணப் பொருள்களுடன் பல லாரிகள் காத்துக்கொண்டிருக்கின்ற போது இஸ்ரேல் அதற்கான அனுவதியை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.