நோயாளி ஒருவரை குறைந்தபட்ச மயக்க நிலையில் வைத்தவாறு, அவரது மூளையின் இடது பக்கத்தில் உள்ள கட்டியை அனுராதபுரம் போதனா வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவின் வைத்தியர் குழுவினர் நேற்றுமுன்தினம் (16) வெற்றிகரமாக சத்திர சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சிற்பக் கலைஞரான சமன் ஜயசிங்க என்ற இந்த நோயாளி சத்திர சிகிச்சை இடம்பெற்ற வேளை ஓவியம் வரைந்துள்ளார்.
பேச்சு மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்தும் அவரது மூளையில் ஒரு பகுதியை தவிர்ப்பதற்காக அவரை ஓவியம் வரையுமாறு வைத்தியர்கள் கேட்டுள்ளனர்.
இந்நாட்டு அரச மருத்துவமனையில் முதன் முதலில் இவ்வாறான சத்திர சிகிச்சையை 2020 ஆம் ஆண்டு குறித்த மருத்துவக் குழுவினர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மேற்கொண்டனர்.
அதே குழுவினர் இவ்வாறான மூன்றாவது சத்திர சிகிச்சையை தற்போது மேற்கொண்டுள்ளனர். நோயாளி சுயநினைவுடன் ஓவியம் வரைந்து கொண்டிருக்கையில் அவரது மூளைக்கட்டியை பிரித்தெடுக்கும் சத்திர சிகிச்சை மிகவும் அபூர்வமானதாகும்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலை நரம்பியல் சத்திர சிகிச்சை பிரிவு வைத்தியர்கள் மேற்கொண்ட இச்சத்திர சிகிச்சையை பலரும் பாராட்டியுள்ளனர்.