நாடாளுமன்றம், கொழும்பு கங்காராம விகாரை உள்ளிட்ட முக்கிய இடங்களின் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படப் போவதாக வெளியான செய்திகளின் உண்மைத் தன்மையை பாதுகாப்பு தரப்பினரே வெளிப்படுத்த வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கசப்பான மறக்க முடியாத அனுபவம் உள்ளதால் எதனையும் அலட்சியப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது. இன்றும் அதன் தாக்கம் தொடர்கிறது.
கண்டி கட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோகதர் ஒவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி தென்னக்கும்புர பகுதியிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் இருந்துள்ளார்.
இதன்போது பல்லேகல சிறைச்சாலையில் இருந்து கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலைக்குரிய பேருந்து சோதனை சாவடிக்கு அருகில் சென்ற போது அந்த பேருந்தில் இருந்த கைதி ஒருவர் ஒரு கடிதத்தை இந்த உப பொலிஸ் பரிசோதகரிடம் கொடுத்து அந்த கடிதத்தை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு அனுப்புங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த உப பொலிஸ் பரிசோதகர் தொலைபேசியில் என்னை தொடர்புக் கொண்டு இவ்விடயத்தை கூறினார்.
அப்போது அந்த கடிதத்தை தபாலில் அனுப்பி வைப்பதற்கு முன்னர் வட்சப் ஊடாக முதலில் அனுப்பி வைக்குமாறு நான் கூறினேன். அதற்கு அமைய அந்த கடிதம் எனக்கு கிடைத்தது. தற்போது கைவசம் உள்ளது.
அந்தக் கைதியின் கடிதத்தில் பல்லேகல சிறைச்சாலையில் தன்னுடன் சிறைக்கூடத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 5 கைதிகள் உள்ளார்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலைப் போன்று இன்னொரு குண்டுத் தாக்குதல் நடத்துவது குறித்து பேசுகின்றார்கள்.
அவர்கள் நாடாளுமன்றம், கொழும்பு கங்காராம விகாரை உள்ளிட்ட முக்கிய இடங்களின் பெயர் குறிப்பிட்டு பேசினர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர் மற்றும் அரச புலனாய்வு பிரிவுக்கு அறிவுறுத்தினேன்.
கைதியின் இக்கடிதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கடிதம் எழுதிய சிறைக் கைதிக்கும் அந்த கைதி குறிப்பிட்ட ஏனைய ஐந்து கைதிகளுக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
ஆகவே அவர்களை பழிவாங்குவதற்கு இவ்வாறு குறிப்பிட்டாரா அல்லது உண்மையில் அவ்வாறு இடம்பெற்றதா என்பதை தொடர்நது ஆராய்வதாக எனக்கு அறிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சந்தேகநபர் கடந்த ஒரு சில தினங்களுக்க முன்னர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஒரு சில விடயங்களை கூறியுள்ளார்.
இதனை சட்டத்தரணிகள் எனக்கு அறிவித்துள்ளார்கள். இந்த நபர் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த நீதிபதி இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.