சொந்த நாட்டின் இனத்தையே கொத்துக்கொத்தாக கொன்றவர்களுக்கு இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித படுகொலைக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதற்கு எந்த அருகதையும் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (20.10.2023) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், வடகிழக்கில் பூரண கதவடைப்புக்கு தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று பூரண கதவடைப்பு அனுஸ்டித்த உறவுகளுக்கு நன்றி கூறுகின்றேன்.
அந்த கதவடைப்பானது முல்லைதீவு நீதிபதியாக இருந்து தனக்கு அச்சுறுத்தல் எனக் கூறி நாட்டைவிட்டு வெளியேறிய நீதிவானுக்கு மாத்திரமின்றி வட கிழக்கிலே நடைபெறும் அத்துமீறல்களுக்கும் பௌத்தமயமாக்களுக்காகவும், மட்டக்களப்பில் நடைபெறும் மேய்ச்சல் தரை பிரச்சினை அனைத்தையும் உள்ளடக்கியே இந்த பூரண கதவடைப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இன்றைய தினம் மின்சாரப்பட்டியில் 18 வீதத்தினால் உயர்த்தப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டாம் கட்ட நிதியுதவியை கொடுப்பதற்காக இலங்கையின் திறைசேரியில் பணம் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த பணத்தை வைப்பு செய்வதற்காக இந்த நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு பணம் இருப்பதாக காட்டுவதற்கு முன்னெடுக்கப்படும் செயலாகவே இந்த மின் கட்டண உயர்வை நாம் பார்க்கின்றோம்.
இந்த நாட்டு மக்களை தொடர்ச்சியாக இந்த அரசாங்கம் வஞ்சித்து வருகின்றது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக யுத்தம் நடைபெற்றுவருகின்றது.
அந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என உலக நாடுகளிடமும், யுத்தம் செய்து வரும் இரு நாடுகளிடமும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டி ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டுவந்து பாராளுமன்றத்தில் தற்போது விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இங்கு நான் கேட்பது என்னவென்றால் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் மே மாதம் யுத்தம் முடிவுற்ற காலம் வரைக்கும் முள்ளிவாய்க்காலில் நடைபெறாத விடயமா இன்று மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறுகின்றது.
ஏழு சதுர கிலோமீற்றருக்குள் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களை திறந்தவெளி சிறைச்சாலைக்குள் அடைத்து வைத்தது போன்று பொஸ்பரஸ் குண்டுகள் கொண்டும், கொத்துக்குண்டுகள் கொண்டும், வான்வழி மூலமாகவும் தாக்குதல் நடாத்தி அதில் 1இலட்சத்து 40ஆயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களை பலியெடுத்து ,சொந்த நாட்டிலேயே சொந்த மக்களையே கொன்று குவித்த இந்த அரசாங்கத்திற்கு இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகள் போர் புரியும் போது அதனை கேட்பதற்கோ, போரை நிறுத்துமாறு கோருவதற்கோ எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை, எந்தவிதமான யோக்கியதையும் இல்லை.
நாங்கள் அந்த யுத்தத்திற்கும் எதிரானவர்கள். மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், மனித உயிர்கள் பலியாகக்கூடாது என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இதனை கூறுவதற்கு இலங்கைக்கு எந்தவித அருகதையும் இல்லை.
இஸ்ரேலில், பாலஸ்தீனத்தில் மக்கள் கடத்தப்படுகின்றார்கள், அவர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள், அது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என கூறும் இலங்கை அரசாங்கம் இறுதி யுத்தத்தின் போது தங்களது உறவினர்களினால் கையளிக்கப்பட்ட உறவுகள் கூட படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது.
கொக்குத்தொடுவாய் போன்ற பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்படும் மனித சடலங்கள் கூட கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்களின் சடலங்களாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்படும் நிலையில் இஸ்ரேல் – பலஸ்தீனம் குறித்து கேட்பதற்கு இலங்கைக்கு எந்த அருகதையும் இல்லை.
2009ஆம் ஆண்டு அத்தனை உயிர்களையும் பலியெடுத்த இலங்கை அரசாங்கம் இன்றுவரை இந்த இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை காணாமல், வடகிழக்கு பகுதிகளை பௌத்தமயமாக்கி இங்கு இது சிங்களவர்கள் வாழ்ந்த பகுதி என்று உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இவர்களுக்கு இஸ்ரேல்-பலஸ்தீனம் பகுதிகளில் சமாதானம் வேண்டும் என்று கேட்பதற்கு எந்த யோக்கியதையும் இல்லை. இந்த நாட்டில் உள்ள நிலைமையினை பார்க்கும்போது இந்த நாட்டின் ஜனாதிபதியின் கருத்தினை செவிமடுப்பதற்கோ ஜனாதிபதியின் பணிப்புரைகளை செயற்படுத்துவதற்கோ யாருமில்லையென்பது நிரூபணமாகி தெரிகின்றது.
புதிய பொலிஸ்மா அதிபரை நியமிக்கவேண்டும் அல்லது சேவை நீட்டிப்பு வழங்கவேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்திற்கு இலங்கை அரசியலமைப்பு சபை கூட எதிராகயிருக்கின்றது. இன்று பொது பாதுகாப்பு அமைச்சராகயிருப்பவர் கூட ஜனாதிபதியின் பணிப்புரைகளை கேட்பதில்லை. அதேபோன்று உயர் பதவியில் இருக்கின்ற அதிகாரிகள் கூட ஜனாதிபதியின் உத்தரவுகளை செயற்படுத்துவதாக தெரியவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மயிலத்தமடு – மாதவனை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசிய போது நாங்கள் மகிழ்ச்சியடையும் வகையில் சில உத்தரவாதங்களை தந்தார். சமூகங்களிடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றது என்ற வகையில் மயிலத்தமடு – மாதவனையில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை நீதிமன்ற அனுமதியைப்பெற்று வெளியேற்றுமாறு பொலிஸ்மா அதிபருக்கும் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்திற்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
மறுதினம் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத்,அம்பிட்டிய சுமனரத்ன தேரருடன் அப்பகுதிக்கு சென்று புத்தர் சிலையொன்றை நிறுவிய விடயம் என்பது இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு எந்தளவுக்கு மரியாதையுள்ளது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
தற்போதும் மயிலத்தமடு – மாதவனை பகுதிக்கு பெரும்பான்மை விவசாயிகள் வந்துகொண்டிருக்கின்றார்கள். இன்று ஜனாதிபதி நாடு திரும்புகின்றார். இதன் பின்னர் என்ன நடைபெறும் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என தெரிவித்தார்.