தனியார் பாடசாலையொன்றில் இளம் பெண்ணொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள பாடசாலையிலேயே நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் 1 ஆம் தரத்தில் இருந்து 6 ஆம் வகுப்பு வரை சுமார் 200 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று அப்பாடசாலைக்குள் நுழைந்த யுவதியொருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதில், 3 மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தகவலறிந்து அங்கு வந்த பொலிஸார் குறித்த யுவதியைச் சுட்டுக் கொன்றனர். பொலிஸாரின் விசாரணையில் குறித்த யுவதி அப்பாடசாலையின் முன்னாள் மாணவி எனவும், அவருக்கு தற்போது 28 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். அதேசமயம் ” இச் சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஜோபைடன், ஆயுதங்கள் தடைசட்டத்தை பாராளுமன்றம் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.