பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர், தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்தநிலையில் அந்த பிராந்திய மக்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருவதாக உரிமை மீறல் அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.
பலுசிஸ்தானின் பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

அரசு அலுவலகங்களில் பாகிஸ்தானிய கொடியை அகற்றி விட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர்.
அத்துடன் தங்களை தனி நாடாக அங்கீகரிக்கும்படி, இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் பலுசிஸ்தான்களின் பிரதிநிதியான மிர் யார் பலோச் என்பவர், பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
எனவே ஊடகங்கள் பலுசிஸ்தானை பாகிஸ்தானின் அங்கமாக குறிப்பிடவேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பலுசிஸ்தானில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். இனி பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கு சொந்தமானது அல்ல என்பது அவர்களின் முடிவாகும்.
எனவே இனிமேல் உலகம் அமைதியாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு சக்திகள் உதவியுடன் வலுக்கட்டாயமாகவே பலுசிஸ்தானை பாகிஸ்தான் இணைத்துக்கொண்டது என்றும் பலுசிஸ்தான்களின் பிரதிநிதியான மிர் யார் பலோச் குறிப்பிட்டுள்ளார்.