தீவக கல்வி வலயத்தின் பிரபல்யமான ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் வித்தியாலயத்தின் 2022ஆம் ஆண்டு 150வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களிடமிருந்து பல மில்லியன் ரூபா நிதியினை அதிபர் தனிநபர் வங்கி கணக்கின் ஊடாக பெற்றுள்ளார்.
இது தொடர்பாக ஆண்டுவிழா வாசிப்பின் போது கணக்கறிக்கை முறை கேடுகள் தொடர்பாக பெற்றோரால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் குறித்த பாடசாலை அதிபர் நிதி விடயம் தொடர்பில் உரிய பதில் வழங்கவில்லை.
இந்நிலையில் முறைகேடு தொடர்பில் வட மாகாண ஆளுநர் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் உரிய பதில் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தீவக வலயக் கல்வி அலுவலக தகவல் வழங்கும் அலுவலரிடம் பாடசாலையின் 150வது ஆண்டுவிழா கணக்கறிக்கைகள் தொடர்பான தகவல்களை முறைப்பாட்டாளர் கோரி விண்ணப்பித்தார்.
பதில் வழங்கிய தீவக கல்வி வலய தகவல் வழங்கும் அலுவலர், தங்களால் கோரப்பட்ட ஆவணங்கள் தனிப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு பெயர்களினூடாக மேற்கொள்ளப்பட்டமையால் இவை தொடர்பான தகவல்களை வழங்கமுடியாதுள்ளது என தெரிவித்திருந்தார்.
இதனால் பாடசாலை நிகழ்வுக்காக தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் சேகரித்த அதிபருக்கு எதிராக வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றது என பெற்றோர் தரப்பால் சந்தேகம் வெளியிடப்படுகிறது.