இஸ்ரேல் நாட்டில் போர் 21ஆவது நாளாகத் தொடரும் நிலையில், முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிப்பது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் 21ஆவது நாளாகத் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் படை முதலில் கடந்த 2023.10.07 திகதி காசாவுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திய நிலையில், அதற்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஹமாஸை தவிர வேறு எந்த எதிரியுடனும் போரில் ஈடுபட இஸ்ரேலுக்கு விருப்பமில்லை என்று தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், சரியான சூழல் அமையும் போது காசாவில் முழு வீச்சில் படையெடுப்பு தொடங்கும் என்று நடவடிக்கை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஹமாஸுக்கு எதிராக தெற்கே நாங்கள் சண்டையிட்டு வருகிறோம். வடக்கில் எந்தவொரு மோதலுக்கும் தயாராக இல்லை. அதேநேரம் வடக்கில் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா நடத்தும் தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி தருகிறோம். இதில் ஹிஸ்புல்லாவுக்கு தான் பல இழப்புகள். நாங்கள் போரை விரிவுபடுத்துவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை” என்றார். இஸ்ரேலில் தெற்கு பகுதியில் தான் காசா பகுதி அமைந்துள்ளது. அங்கே தான் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக இஸ்ரேலின் வடக்கு எல்லையில் உள்ள லெபனானில் இருந்தும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை நடத்தி வருகிறது. அதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வந்ததால் போர் விரிவடையும் என்று அஞ்சப்பட்டது.
அதைத்தான் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தற்போது தங்கள் இலக்குகள் ஹமாஸ் படை மட்டுமே என்று கூறியுள்ள அவர், ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டாலும் கூட அங்கே போரை நடத்த விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து காசா மீதான படையெடுப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “காசா மீதான படையெடுப்பை முழு வீச்சில் ஆரம்பிக்கப் போகிறோம். அது நாள் வெகு தொலைவில் இல்லை . சரியான சூழல் அமையும் போது தாக்குதலை ஆரம்பிப்போம். ஹமாஸிடம் இப்போது பல பிணைக் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.
ஹமாஸுக்கு பதிலடி தரும் வகையில் காசா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. சில காலமாகவே முழு வீச்சில் காசா மீது படையெடுக்க உள்ளதாக இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும், சர்வதேச அழுத்தம், ஹமாஸ் வசம் இருக்கும் பிணைக் கைதிகள், அங்குள்ள சுரங்க வழித்தடங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் காசா மீதான படையெடுப்பை இஸ்ரேல் இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்தச் சூழலில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறிய இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நேற்றைய தினம் இரவு நேரத்தில் வடக்கு காசாவின் பகுதிகளுக்குள் நுழைந்த இஸ்ரேல் பீரங்கிகள் பல்வேறு இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. காசா இலக்குகளைக் குறித்துவைத்து சரமாரியாகத் தாக்குதலை நடத்திய இஸ்ரேல் படை சில மணி நேரத்தில் மீண்டும் இஸ்ரேலுக்குத் திரும்பிவிட்டது. இஸ்ரேல் போர் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் ஆரம்பித்துவிட்டதையே இது காட்டுவதாகப் பலரும் குறிப்பிட்டனர்.