ஊழியர் ஒருவர் ஒரு நாளைக்கு உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் 12 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற புதிய வேலைவாய்ப்பு சட்டம் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
சட்ட மூலத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சட்டம் மூலமாக எட்டு மணி நேர வேலை இல்லாது போவதுடன் எட்டு மணி நேர வேலை நேரத்திற்கு பின் பணியாற்றும் ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை இல்லாமால் போகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வாரத்தில் 45 மணி நேரம் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு 1 1/2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று புதிய சட்டம் பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கு குறைந்தது 100 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வேலைவாய்ப்பு சட்டம் ஊழியர் ஓய்வுபெறுவதற்கான குறைந்தபட்ச வயது 55 ஆக இருக்க வேண்டும் என்றும் 60 வயது வரை சேவையில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்ட ஊழியர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தக் கூடாது என்றும் புதிய வேலைவாய்ப்புச் சட்டம் பரிந்துரைத்துள்ளது.
மேலும், புதிய வேலைவாய்ப்புச் சட்டம், பணியின் தன்மை மற்றும் பயன்பாட்டுத் தேவையைப் பொறுத்து, பணி வழங்குனர் மற்றும் பணியாளரின் விருப்பத்தின் அடிப்படையில், சேவை ஒப்பந்தத்தின்படி, ஓய்வு பெறும் வயதை 55 முதல் 60 வயது வரை நீடிக்க அனுமதிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தற்போதுள்ள விதிமுறைகளுடன் கூடிய புதிய வேலைவாய்ப்புச் சட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.
மேலும், சட்டத்தை உருவாக்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் நாட்டின் பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பங்களிப்புடன் அலரி மாளிகையில் நடைபெற்றது.
அந்த விவாதங்களின்படி தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய புதிய வேலைவாய்ப்பு சட்டமூலம் தொடர்பான முன்மொழிவுகளை பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவைக்கு அனுப்பி வைத்துள்ளார்.