2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முற்றுமுழுதாக சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று (30) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பததும்பர மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முற்றுமுழுதாக சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைத் தொகையினை வெளியிடுவதற்காக அவர்களின் முன்மொழிவுக்கமைய இலங்கையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
அதேபோல் 2024 ஆம் ஆண்டிற்கான பாதீட்டிலும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளின் அடிப்படையிலேயே வரவு செலவுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அரச வருமானத்தினை 9 வீதத்தில் இருந்து 12 வீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிய வரிகளை அறிமுகப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதனாலேயே அரசாங்கம் இப்போது புதிய வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளது, அதன்படி ஜனவரி 2024 முதல் செல்வ வரி மற்றும் பாரம்பரிய வரி என்பன அறிமுகப்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரிக் கோப்புகளும் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி முதல் திறக்கப்படவுள்ளதாக” அவர் குறிப்பிட்டார்.