சீனாவின் ஆய்வு கப்பலான ஷியான் 6 ஆய்வு பணிகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. இவ்வாறானதொரு கப்பல் வருவது தொடர்பில் ஏற்கனவே சர்ச்சைகள் வெளியாகியிருந்தன. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆரம்பத்தில் குறித்த கப்பலுக்கு அனுமதி அளிக்கவில்லையென்றும் – இந்தியாவின் கரிசனைகளுக்கே தாம் முக்கியத்துவளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனினும், இலங்கையால் நிர்ணயிக்கப்படும் தராதரங்களுக்கு அமைவாக இருந்தால் அனுமதிப்பதில் பிரச்சனையில்லை என்றும் தெரிவித்திருந்தார். சமீபத்தில், ஐ. நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்குகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தபோது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கீழ் நிலைச் செயலர் விக்ரோறியா நூலண்ட் இது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார். அப்போதும் தாம் தாரதரங்களை நிர்ணயம் செய்திருப்பதாகவும் அதற்கமைவாக இருந்தால் மட்டுமே கப்பலை நாட்டுக்குள் அனுமதிப்போம் எனவும் சப்ரி குறிப்பிட்டிருந்தார்.
இதே வேளை, ஐ. நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குகொள்வதற்காக சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க சிந்தனைக்கூடமொன்றின் நிகழ்வில் பங்குகொண்டிருந்தார். இதன்போதும், சீனாவின் கப்பல் விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது – அதாவது, சீனாவின் உளவுக் கப்பலான யுவான் 5 அம்பாந்தோட்டையில் நங்கூரமிடப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்து. உளவுக் கப்பலென்று எதுவுமில்லை – உளவுக் கப்பல்களை எவரும் வைத்திருக்கவுமில்லை – என்றவாறு ரணில் எள்ளல் பாணியில் பதிலளித்திருந்தார். அத்துடன், அமெரிக்காவின் மூலோபாய நகர்வுகள் சிலவற்றை விமர்சித்தும் இருந்தார்.
அமெரிக்க நிபுணர்களின் ஆய்வுகளின்படி சீனா சாதாரண மீன்பிடி படகுகளையே சீன இராணுவத்தின் தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதாகக் கூறுகின்றனர். இந்த விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்யக்கூடிய நிபுணர்கள் ஒப்பீட்டடிப்படையில் இந்தியாவில் பெரியளவில் இல்லை. இந்திய ஊடகங்கள் அமெரிக்க ஆய்வாளர்களின் கருத்துகளை மேற்கோள் காட்டியே சில விடயங்களை குறிப்பிடுகின்றன. இந்து சமுத்திர பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டு, சீனா கடற்படை விரிவாக்கத்தை மேற்கொண்டுவருவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைகள் கூறுகின்றன. இந்த பின்புலத்தில், இலங்கையில் சீனாவின் கப்பல்கள் வந்து செல்லும் விடயமும் நோக்கப்படுகின்றது.
இந்தியாவின் உடனடி அயல் நாடான இலங்கையில் சீன மக்கள் இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்ற கப்பல்கள் தொடர்ச்சியாக வருவதை இந்தியா எச்சரிக்கையுடன்தான் நோக்கும். ஏனெனில், இந்தியாவின் முக்கிய இராணுவ மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. இந்த நிலையில், உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப ஆற்றலை கொண்டிருக்கும் சீன கப்பல்கள் இலங்கையின் துறைமுகத்தில் தங்கியிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதுதான். சீனா உளவு பார்த்ததற்கு ஆதாரங்கள் இல்லையென்று கூற முடியுமானால் – உளவு பார்க்கவில்லை என்பதற்கும் ஆதாரங்களை காண முடியாது. உளவுக் கப்பலென்று ஒன்றில்லையென்று ரணில் சாதாரணமாகக் கூறிவிட்டுச் செல்லக்கூடிய விடயமல்ல இது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோச, கடந்த ஆண்டு தாய்வான் சென்றிருந்தார் – இதனை ஆட்சேபித்த சீனா ஜெட் விமானங்களை தாய்வான் வான் பரப்புக்குள் அனுப்பி அந்த நாட்டை அச்சுறுத்தியது. கூடவே, தாய்வானை சுற்றி வட்டமிடும் வகையில் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு அதனை அச்சுறுத்தியது. ஒருவேளை அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்று தாய்வானுக்குள் சென்றிருந்தால், சீனா எவ்வாறு நடந்துகொண்டிருக்கும்? இந்த இடத்தில் இந்தியா சீனாவுக்கு கடும்தொனியில் – இதுவரையில் பதிலளிக்கவில்லை.