வடக்கின் 5 மாவட்டங்களுக்குமான 4 நாள் பயணமாக நாளை சீனத்தூதுவர் தலைமையிலான குழுவினர்
வருகை தருகின்றனர்.வவுனியாவை நாளை காலை 10 மணிக்கு வந்தடையும் சீனத் தூதுவர்
குழுவினர், அம் மாவட்டத்தில் 500 பேருக்கான வாழ்வாதாரப் பொதிகளை வழங்கி வைக்கவுள்ளனர்.
அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பயணிக்கும் சீனத் தூதுவர் குழுவினர், முல்லைத்தீவுமாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குமான 500 பொதிகளை மாவட்ட அரச அதிபரிம் கையளிக்கவுள்ளனர். வெலிஓயாவுக்கான 250 பொதிகளை அவர்களே நேரில் வழங்குகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம்
பொதிகளைக் கையளித்த பின்பு யாழ்ப்பாணம் வருகின்றனர் சீனத் தூதுவர்குழுவினர்.
நாளைமறுதினம் சீனத் தூதுவர் மற்றும் சீன பௌத்த அமைப்பின் பிரதிநிதிகள் காலை 9 மணியளவில்
யாழ். ஆயரைச் சந்தித்துக் கலந்துரை யாடவுள்ளனர்.அவர்கள் காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ள அந்தக் குழுவினர், நெடுந்தீவு மக்களுக்கு 500 பொதிகளைக் கையளிக்கவுள்ளனர்.
அதையடுத்து மாலை 2 மணிக்கு நாவற்குழி விகாரைக்குச் சீனத் தூதுவர் குழுவினர் பயணிக்கின்றனர்.
7 ஆம் திகதி காலை நயினாதீவு பயணிக்கும் சீனத் தூதுவர் குழுவினர், நாகவிகாரைக்கு 250 பொதிகள் வழங்குகின்றனர். அதன்பின்னர் 7 ஆம் திகதி மாலை மன்னாருக்குப் பயணித்து 8 ஆம் திகதி மன்னார் நிகழ்வுகளில் பங்குகொண்டு அன்று மாலை கொழும்பு திரும்புகின்றனர்.
அதேசமயம் இலங்கைக்கான சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அக் குழுவினருக்கு எதிராக வடக்கில் வலுவான எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும்(6)ஆம் திகதி இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் வருகை தரவுள்ளனர்.
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் வல்லாதிக்கப் போட்டியின் காரணமாக இந்தியாவின் தலையீடுகளைக் குறைக்கும் நோக்கில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.