கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா ஏழு புதிய கிரகங்களை கண்டுபிடித்து குறித்த கண்டுபிடிப்பிற்கு ஆய்வாளர்கள் கெப்லர்-385 என்று பெயர் வைத்துள்ளனர்.
சூரியக் குடும்பத்திலுள்ள கிரகங்களை காட்டிலும் குறித்த கிரகங்களில் இருந்து வெளி வரும் வெப்பம் அதிகமாக காணப்படுகின்றமையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், கண்டுபிடிக்கப்பட்ட ஏழு கிரகங்களும் அளவில் பூமியை விடப் பெரிதாகவும் நெப்டியூனை விட சிறியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெப்லர்-385 இன் மையத்தில் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அந்த நட்சத்திரம் நமது சூரியனை விட சுமார் 10% பெரியதாகவும் 5% வெப்பமானதாகவும் காணப்படுகிறதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக வெளியே கண்டுபிடிக்கப்படும் சூரிய குடும்பங்களில் அதிகளவில் கிரகங்கள் இருக்காது என்றும் ஆறுக்கும் மேற்பட்ட கிரகங்களைக் கொண்ட ஒரு சில சூரியக் குடும்பங்களில் இந்த கெப்லர்-385 ஒன்றாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதா என்பது பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை. இந்த கிரகங்களின் அமைப்பை பற்றி இன்னும் கூடுதல் ஆய்வை நாசா மேற்கொள்ள இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.