முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவினால் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டு, 4 வருடங்களின் பின்னர், மீண்டும் அதனை ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சம்பிரதாயபூர்வமாக நேற்று சனிக்கிழமை (04) புனானையில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் வைத்து ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவிடம் கையளித்தார்.
மட்டக்களப்பு புனானையில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் பல்கலைக்கழகத்தை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா நிர்மாணித்து வந்துள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர், அதனை அரசாங்கம் கையகப்படுத்தியது.
அதனை தொடர்ந்து, இராணுவ பாதுகாப்பில் இருந்து வந்த பல்கலைக்கழகத்தை இராணுவத்தினர் கொரோனா நோய்க்கான சிகிச்சை முகாமாக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் கல்வியினை மேம்படுத்துவதற்காக இப்பல்கலைக்கழகத்தை வழங்குமாறு ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, இதனை மீண்டும் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவிடம் வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கிழக்கு மாகாண ஆளுநருக்கு ஆலோசனை மற்றும் பணிப்புரை வழங்கப்பட்டது.
அதன் பின்னரே, இந்த தனியார் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உரியவரிடம் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துகொண்டு பல்கலைக்கழக திட்டங்களை கேட்டறிந்ததோடு, கற்றல் பகுதிகளை சென்று பார்வையிட்டார்.
பின்னர், குறித்த பல்கலைக்கழகத்தின் திறப்பை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.