அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சம்பந்தமாக பிரதமரின் செயலாளரின் தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (கோபா) நியமிக்கப்பட்ட அடிப்படைத் தொழில்நுட்பக் குழு முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக அண்மையில் கூடியது.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இந்தத் தொழில்நுட்பக் குழுவின் செயற்பாட்டைப் பாராட்டிய கோபா குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன குறிப்பிடுகையில்,
இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையைப் பரிசீலனை செய்ததாகவும், அதற்காக நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்தத் தொழில்நுட்பக் குழு எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவது இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வருமானத்தை சேகரித்தல், அதிகரித்தல் என்பவற்றுக்கு வினைத்திறனான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி பங்குதாரர்களுடன் செயற்படுவது தொடர்பில் இந்தத் தொழில்நுட்பக் குழு 2023.03.23 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
இதனால் 2023 – 2024 ஆண்டுகளில் செயற்படும் நோக்கில் 13 அரச நிறுவங்களினால் இணங்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதன் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய, உள்நாட்டு வருமானத்தை அதிகரிப்பது தொடர்பில் நாட்டின் முக்கியமான நிறுவனங்கள் தொழிநுட்பரீதியில் கட்டமைக்கப்படுத்தல் முக்கியமானது எனக் கோபா குழு சுட்டிக்காட்டியது. அதேபோன்று, சர்வதேச அளவிலான அறிவு இதற்குத் தேவை எனச் சுட்டிக்காட்டிய கோபா குழு, ஏனைய நாடுகளில் இது எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது தொடர்பான புரிதலைப் பெற்றுக்கொள்வது முக்கியமானது எனவும் இதன்போது தெரிவித்தது.
அத்துடன், டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், இந்தத் தொழில்நுட்பக் குழுவுடன் ஒரு மாதத்துக்கு ஒரு முறை கோபா குழு கூடுவது முக்கியமானது என கோபா குழுவின் தலைவர் இராஜங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலங்கை சுங்கத்துக்குக் கிடைக்கும் வருமானத்தில் எந்தளவு தொகை ஒன்லைன் ஊடாக மற்றும் சாதாரண முறையில் கிடைக்கப்பெறுகின்றது என்பது தொடர்பில் அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் வழங்குமாறு கோபா பரிந்துரை வழங்கியது.