கொழும்பு தாமரை கோபுரத்தில் கயிறு ஏறும்( அப்செய்லிங்) பொழுதுபோக்கு விளையாட்டுகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதென தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தாமரை கோபுரத்தில் நேற்று (7) இதன் ஆரம்பகட்ட நிகழ்வுகள் நடைப்பெற்றன.
இது குறித்து, கொழும்பு தாமரைக் கோபுரத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.பி.பி சமரசிங்க தெரிவிக்கையில்,
2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த வளாகம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டதிலிருந்து 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதனை பார்வையிட்டுள்ளனர்.
இவ் வருடம் இறுதியில் ஸ்கைவாக் அனுபவம் மற்றும் உணவகங்கள் திறக்கப்படும் என்றும், பங்கீ ஜம்பிங் வருவதற்கு தாமதமாகும் என்றும், மேலும் டிஜிட்டல் கலை அருங்காட்சியகம் ஜனவரி மாதம் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தாமரை கோபுரத்தை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கபட்டு 2018ல் பணிகள் நிறைவுற்றிருந்த நிலையில் 2022 பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
தற்போது தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.