நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றையதினம்(09) முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா பிரதான நகரின் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக கருதப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டல் நிறுவனத்துக்கு ஒப்படைக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த யோசனைக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கமைவாக தபால் நிலையத்திற்கு முன்பாக திரண்ட போராட்டக்காரர்கள், கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு, தமது கடைகளை மூடி நகர வர்த்தகர்கள், வர்த்தகர்கள் சங்கம், முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் உள்ளிட்டோர் தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதிகளில் பேரணியாகச் சென்று அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
குறித்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலயம் தடைப்பட்டு இருந்தது. போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இப்போராட்டத்தில் தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தபால் நிலைய ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.