ஆசியாவிலேயே கேவலம் கெட்ட ஒரு நாடாக இலங்கை வந்திருக்கின்றதென்றால் ஆட்சியாளர்களின் மனநிலை தான் அதற்கு காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்- எங்களுடைய இனம் கிட்டத்தட்ட நாங்கள் படித்த வரலாறுகளின் படி 5000
வருடங்களாக அடிமைகளாக இருந்திருக்கின்றோம். இன்றும் அடிமைகளாக தான் இருக்கின்றோம், நாங்கள் எல்லோரும் கௌரவமான அடிமைகள். ராவணன் ஓர் தமிழ் மன்னன், ஆரியர்களினால் அவரின் சாம்ராச்சியம்
அழிக்கப்பட்டது என்பதும், அவர் அரக்கராக சித்திரிக்கப்பட்டார் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அன்றைய கால கட்டத்தில் கடவுள் நம்பிக்கையோடு சேர்த்து அரக்கர்கள் என்று சொல்லப்பட்டது, இன்றைய நவீன காலகட்டத்தில் விடுதலைப் போராட்டம், நியாயமான உரிமைப் போராட்டம், அதுவும் ஒரு சமூகத்துக்காக குரல் கொடுக்கின்றவர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டு அழிக்கப்பட்ட
வரலாறுகளும் இடம் பெற்றிருக்கின்றன.
அந்த வகையில் நீங்கள் அந்த இருட்டடிக்கப்பட்ட வரலாற்றை திருப்பி காட்டியிருக்கிறீர்கள். இருட்டடிக்கப்பட்ட எமது வரலாறுகளை மீண்டும் நேர் நிறுத்தி எமது இளைய சமுதாயத்திற்கு ஒரு நல்ல வழிகாட்டிகளாக நீங்கள் இருக்க வேண்டும். ஒரு காலத்தில் இலங்கை போன்று வரவேண்டும் என்று சிந்தித்த சிங்கப்பூர் இன்று உலகில் மிக முன்னேறிய ஒரு நாடாக இருக்கின்றது. இலங்கையில் படித்தவர்கள் நிறைய பேர் அந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கே வாழமுடியாமல் நாங்கள் ஓடிக் கொண்டிருப்பதற்கு காரணம் இந்த நாட்டின் ஆட்சியாளர்களின் மனநிலை தான் – என்றார்.