இலங்கையில் பண்டைய இந்துக் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்கும் நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் முன்னெடுப்பது தொடர்பில் அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக்கொண்ட தமிழர் நடவடிக்கை குழுவான தமிழ் டயஸ்போரா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கான சர்வதேச உதவிகளை வரவேற்கும் குறித்த அமைப்பு, அந்த உதவியை இலங்கை அரசாங்கம் இந்து பாரம்பரிய அழிப்புக்கு பயன்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு தமிழ் டயஸ்போரா அமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பில் வெளியான செய்திக் குறிப்பில், “1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து சுமார் ஆயிரத்து 800 இந்துக் கோவில்கள் மற்றும் பாரம்பரிய தளங்களை அழித்த பின்னர், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இந்துக் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் கோவில்கள் தற்போது இலக்கு வைக்கப்படுகிறது.
இலங்கையின் வடக்கு கடற்கரையில் உள்ள கீரிமலையில் மிகவும் போற்றப்படும் தலமான ஆதி சிவன் கோவிலில் ஐந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில், இராணுவ ஆக்கிரமிப்பின் மறைவின் கீழ் அழிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து பல ஆண்டுகால இராணுவக் கட்டுப்பாட்டின் பின்னர் முதன்முறையாக இந்தப் பகுதிக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட போதுதான் இந்தச் செய்தி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இடிக்கப்பட்ட கோவிலுக்கு பதிலாக, அங்கு ஒரு அதிபர் மாளிகை கட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்துக்கள், இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை செய்யும் இடம், யோகியின் பழங்கால நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள இடம் மற்றும் முழு நாட்டிலும் உள்ள இந்துக்களுக்கு புனிதமான தன்மையை கொண்ட இடத்தை இலங்கை அரசாங்கம் இழிவுப்படுத்தியுள்ளது” – என்றுள்ளது.