நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
தமது முறைப்பாடுகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக PHIU செயற்குழு உறுப்பினர் ரொஷான் குமார தெரிவித்துள்ளார்.
களப்பணிகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளை அதிகரிக்கத் தவறியமை முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.
“இந்த கொடுப்பனவுகள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, எரிபொருள் விலைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போகவில்லை, இது பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.
“தங்கள் குறைகளை வெளிப்படுத்த, சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்படி, தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக அனைத்து டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் இதுவரை 71,800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நோய்த்தொற்றுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.