அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாம் செயலாளர் சோபியா வில்கின்சனினால் மட்டக்களப்பில் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் இன்று (21) திகதி திறந்துவைக்கப்பட்டது.
சென் மேரிஸ் மோன்டேசரி ஹவுஸ் குழந்தைகள் பராமரிப்பு நிலைய பொறுப்பதிகாரி திருமதி ரஜினி பிரான்சிஸ் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில், சர்வேதயா நிறுவனத்தின் தலைவர் வின்யா ஆரியரத்ன, கொமர்சல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் சனத் மானதுங்க, சர்வதேச நிதி நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான முகாமையாளர் அலிஜன்ரொ, இந்நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் நிமாலி எஸ்குமாரி (சர்வோதயம்), மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் (சர்வோதயம்) வேனுஸ்ரீ புவனேந்திரராஜா உள்ளிட்ட சர்வோதயம் மற்றும் சென் மேரிஸ் மோன்டேசரி ஹவுஸ் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது குறித்த பராமரிப்பு நிலையம் அதிதிகளினால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதுடன், சிறார்களின் கண்கவர் நடனம் மற்றும் பாடல்கள் என்பன நிகழ்வை அலங்கரித்ததுடன், சிறார்களினால் அதிதிகளுக்கு அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டது.
குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் தொடர்பாடலை விருத்தி செய்வதன் மூலம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடிவதோடு ஆரோக்கியமான பிரஜைகளா இவர்களை உருவாக்க முடியுமெனவும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு நிலையமாக இது அமையுமென தான் நம்புவதாகவும் இதன்போது சோபியா வில்கின்சன் தனது உரையில்
தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் சிறுவர்களை பராமரிப்பதற்கான நிலையம் இன்மையால் தொழில்புரியும் பெற்றோர்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், மாவட்டத்தில் முதலாவது குழந்தைகள் பராமரிப்பு நிலையமாக இந்நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.