இந்நாட்டில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பாலியல் அறிவு போதாது எனவும், அவர்களின் வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு பாலியல் அறிவு வழங்கப்பட வேண்டும் எனவும் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி நேற்று(20) பாராளுமன்றத்தில் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இலங்கையில் 2,287 குழந்தை தாய்மார்கள் இருப்பதாக அவர் கூறினார்.
வயதுக்கு ஏற்ப பாலியல் கல்வி பற்றிய அறிவு வழங்கப்படாததால், குழந்தைகளின் பாலின கல்வி குறைந்துள்ளதாகவும், குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கேற்ப அவர்களின் உடல் உரிமைகள் குறித்து படிப்படியாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“16 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் உடலுறவு கொள்வது தவறானது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. குழந்தை கருவுற்றால், அரசு தலையிடும். பொருளாதாரச் சிரமங்களைக் கொண்ட கிராம மட்டக் குழந்தைகளுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.”