துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கலக்சி லீடர் என்ற கப்பல் செங்கடல் பகுதியில் வைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இஸ்ரேலியர்கள் உட்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52 பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த சரக்கு கப்பலை ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களான ஹவுதி குழுவினர் கடத்தி சென்று விட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்டுள்ள கலக்ஸி லீடர் என்ற சரக்கு கப்பல் பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஜப்பானை சேர்ந்த நிறுவனம் இயக்கி வருகிறது.
எனினும், இதில் இஸ்ரேலை சேர்ந்த வியாபாரிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இஸ்ரேலின் கப்பல்கள் எங்களின் “நியாயமான இலக்கு அது எங்கிருந்தாலும், நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்” என்று ஹவுத்தி அமைப்பின் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஈரானின் பின்புலத்தில் இயங்குபவர்கள் எனவும் அவர்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு உதவி புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில், யேமன் கடற்கரையில் அமெரிக்க இராணுவ ஆளில்லா விமானத்தை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.