வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் இவ் விவகாரத்துக்கு நீதிகோரி இந்த வழக்கில் 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர்.
குறித்த இளைஞனின் மரணம் வடக்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இளைஞனின் இறுதிக் கிரியைகள் பெரும் எண்ணிக்கையான மக்களின் பங்கெடுப்புடன் இடம்பெற்றது.
இந்நிலையில், உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல தரப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ள நிலையில், உயிரிழந்த இளைஞனின் சார்பாக 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதி மன்றில் முன்னிலையாகத் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பாக யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா,
‘இளைஞனின் மரணம் கொலை என்பது தெட்டத் தெளிவானது. இந்த வழக்கு நடவடிக்கையில் அனைத்துச் சட்டத்தரணிகளும் இணைந்துகொள்ள வேண்டும். பிரதானமாக குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்தவர்களும் இணைந்துகொள்ளவேண்டும்’என்று அழைப்பு விடுத்தார்.
‘எதிர்வரும் 24ஆம் திகதி வழக்கு நடை பெறவிருக்கின்றது. அன்று அவரது உடற் கூற்றுப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தொடர்ச்சியான சித்திரவதையால்தான் இளைஞர் மரணமடைந்துள்ளார். இந்தக் கொலை தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை பொலிஸ் தரப்பால் விரைவாக எடுக்க வேண்டும். அனைத்து விடயங்களும் நீதி மன்றத்துக்கு வரவேண்டும். இந்தக் கொலைக்குக் காரணமான அனைவரும் நீதிமன்றில் உடனடியாக முற்படுத் தப்படவேண்டும்.
இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்துடன் யாழ்ப்பாணம் நீதிமன்றில் விண்ணப்பங்களை முன்வைப்போம். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சட்டத்தரணிகள் அனைவரும் இந்த நடவடிக்கையில் இணைந்து கொள்ளவேண்டும்.
பொலிஸ் காவல் மரணம் என்பது சட்டத்தின் ஆட்சிக்கே விடுக்கப்பட்ட பகிரங்க சவால் அதை நாம் எதிர்கொள்வோம்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.