பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்தத் தவறை 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் சரி செய்துள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவதன் மூலம் சுதந்திரமான பொருளாதார செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும், எனவே இது எதிர்கால பொருளாதாரத்திற்கான ஜனநாயக ரீதியிலான முதலீடாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணாயக்கார,
இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்த முன்னர் நாம் கடந்து வந்த பாதை குறித்து மீட்டிப்பார்க்க வேண்டும். கடந்த வருடங்களில் இந்த நாடு இருந்த நிலை பற்றி இன்று பலரும் கதைப்பதில்லை. கொவிட் தொற்றுப்பரவல் காரணமாக நாடு தனது வழமையான செயற்பாட்டை இழந்ததுடன் முழுமையாக ஸ்தம்பித்து ஒரே இடத்தில் நின்றது என்று கூறலாம். அதன் ஊடாக நெருக்கடிகளை எதிர்கொண்ட பொருளாதாரம், பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக நிலையற்ற தன்மை காரணமாக பாரிய அளவில் வீழ்ச்சியடைத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து அப்போதைய அரசாங்கம், இந்த நாட்டைப் பொறுப்பேற்குமாறு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும் இன்று எம்மை விமர்சிக்கும் எவரும் அன்று நாட்டிற்கு தலைமைத்துவம் வழங்க முன்வரவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பாரிய சவால்மிக்க பொறுப்பை ஏற்றதுடன் மிகவும் அவதானமிக்க தீர்மானங்களை எடுத்து இந்நாட்டை தற்போது ஓரளவு ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார். 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்தும் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதுடன், 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் தமது வேலைத்திட்டங்களை சமர்ப்பித்துள்ளார்.
அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் காரணமாக 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 73.70% ஆக அதிகரித்த பணவீக்கத்தை தற்போது, ஒற்றை இலக்கமாகக் குறைக்க முடிந்துள்ளது. இதன் ஊடாக பணவீக்கத்தின் தாக்கத்தில் இருந்து நாட்டை மீட்க முடிந்தது. கடந்த வருடங்களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு அரச வருமான இழப்பே பிரதான காரணமாக அமைந்தது. மீண்டும் அவ்வாரானதொரு நிலை ஏற்படாமல் இருப்பதற்காக அன்று நடைமுறைப்படுத்தப்பட்ட வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மிகவும் வறுமையில் வாடும் மக்களுக்கான “அஸ்வெசும” நலன்புரிக் கொடுப்பனவுகளுக்காக சுமார் 183 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 20 இலட்சம் குடும்பங்கள் நன்மை அடையவுள்ளனர். அதேபோன்று இதுவரை காணி உறுதிகள் வழங்கப்படாத மக்களுக்கு அவர்களின் காணிகளுக்கு முழு உரிமையுடன் கூடிய காணி உறுதிப்பத்திரங்களை வழங்கவும் மற்றும் அடுக்கு மாடிக் குடியிறுப்புகளில் வசிப்பவர்களுக்கு அந்த வீடுகளின் உரிமையை வழங்கவும் முன்மொழியப்பட்ட்டுள்ளது.
இதற்கு இணையாக மலையக மக்களுக்கான காணிகளை வழங்கவும் திட்டமிடப்படப்பட்டுள்ளது. மேலும், “பிம் சவிய” வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நாட்டில் முறைசாரா தொழிலாளர்கள் என்று குறிப்பிடப்படும் உதாரணமாக, கட்டிட நிர்மாணப்பணிகளில் ஈடுபடுவோர், நீர்க்குழாய் பொறுத்துபவர்கள், தளபாட உற்பத்தியாளர்கள் போன்ற தொழில்களில் ஈடுபடுவோரின் தொழிலுக்கு பெறுமதியை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். அவர்களையும் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றில் இணைத்துக்கொள்ளவும் அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் தொழில் தரத்தை மேம்படுத்தவும், அவர்கள் ஒன்று சேர்ந்த குழுக்களாக இயங்கவும் அவசியமான அரசாங்கத்தின் பங்களிப்பை வழங்கக் கூடிய சட்டவிதிகளைப் புதிய தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வரவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது புதிய தொழிலாளர் சட்ட உருவாக்கம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதன் மூலம் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கவும் அரச நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிக்கவும் அவற்றை டிஜிடல்மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இறக்குமதிகள் மூலம் எமது நாட்டுக்கு கிடைக்க வேண்டிய அந்நியச் செலாவணியை முழுமையாக பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இலங்கை சுங்கத்தில் இடம்பெறும் மோசடிகளை நிறுத்த அதன் செயற்பாடுகளை டிஜிடல்மயப்படுத்த அவசியமான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் திட்டத்திற்காகவும் இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தை நவீனமயப்படுத்தவும் அதேபோன்று, பாரம்பரியமாக தாம் விவசாயம் செய்துவந்த விவசாயக் காணிகளின் உரிமையை குறித்த விவசாயிகளுக்கே வழங்கும் திட்டமும் அமுல்படுத்தப்படவுள்ளது” என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார மேலும் தெரிவித்தார்.