ஒரு செல்லப்பிராணியை வளர்ப்பவராக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு நீங்கள் அவர்களின் மொழியை புரிந்துகொள்ள ஆரம்பித்து இருப்பீர்கள். உங்கள் பூனை அல்லது நாய் எதற்கு வால் ஆட்டுகிறது, உங்கள் நாய் எதற்காக குலைக்கிறது போன்ற விஷயங்களுக்கு பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்களை நீங்கள் முடிந்த அளவு புரிந்து கொள்வீர்கள். ஆனால் இதுவே உங்கள் செல்லப்பிராணி என்ன பேசுகிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
நாம் வளர்க்கும் பூனை அல்லது நாய் நம்மை என்ன பெயரிட்டு அழைக்கும்? என்பதை தெரிந்து கொள்ள நிச்சயமாக நமக்கு ஆர்வமாக இருக்கும். உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி விலங்குகளின் மொழியை மனிதருக்கு புரியும் வகையில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
டேனியல் மில்ஸ் என்பவர் லின்கன் பல்கலைக்கழகத்தில் வெட்டரினரி பிஹேவியரல் மெடிசன் விரிவுரையாளர் (veterinary behavioral medicine professor ) ஆவார். உங்களது செல்லப்பிராணி உங்களிடம் கூற நினைப்பதை AI மூலமாக நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இவர் தெரிவித்துள்ளார். செல்லப் பிராணிகள் குறித்த பல விஷயங்களை நமக்கு AI கற்றுக் கொடுக்கும் என்றும் இவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வை தொடர்ந்து கடந்த வாரம் பூனைகளின் முக பாவனைகள் குறித்த ஒரு ஆய்வு The Science Direct பத்திரிக்கையில் வெளியானது. இதில் பூனைகள் பிற பூனைகளுடன் பேசும் பொழுது கிட்டத்தட்ட 276 முக பாவனைகளை வெளிப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. பூனைகள் மனிதர்களிடம் பேசுவது மற்றும் பிற பூனைகளுடன் தொடர்பு கொள்வது ஆகிய இரண்டிற்கும் இடையில் வேறுபாடு இருப்பதாக லயன் கல்லூரியை சேர்ந்த அசிஸ்டன்ட் சைக்காலஜி விரிவுரையாளர் டாக்டர். பிரிட்டானி ஃப்ளோர்கிவிச் (Brittany Florkiewicz) கூறுகிறார்.
இவ்வாறு முக பாவனைகளில் பூனைகள் வெளிப்படுத்தும் இந்த கடினத்தன்மை காரணமாக அவர்களை புரிந்து கொள்வதில் சவால்கள் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் தான் நமக்கு புதிய AI ஆய்வு உதவி புரிய உள்ளது.
செல்லப்பிராணிகள் தங்களது காதுகளை வைத்திருக்கக்கூடிய நிலையை பொறுத்து ஒரு சில குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் உணர்வுகளை செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி நாம் கண்டுபிடிக்கலாம் என மில்ஸ் தெரிவித்துள்ளார். செல்லப்பிராணிகள் வெளிப்படுத்தும் பல்வேறு பாவனைகளை பிரித்து அறிவதன் மூலமாக அவற்றின் மொழியை நம்மால் புரிந்து கொள்ள இயலும் என்று சொல்லப்படுகிறது.
AI-இன் இந்த பயன்பாடு செல்லப்பிராணிகள் பிறரிடம் எவ்வாறு தொடர்பு கொள்ளும் என்பதை பற்றி அறிவதற்கு மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஏற்படக்கூடிய உணர்வுகளை புரிந்து கொள்வதற்கும் இது உதவியாக இருக்கும். உதாரணமாக மாடுகளின் முகபாவனைகளை தெரிந்து கொள்வது பால் கறக்கும் பொழுது அவர்களுக்கு ஏற்படக்கூடிய வலியின் அறிகுறிகளை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படலாம். மேலும் அவர்களது ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்கு தினசரி ஹெல்த் செக்கப்களை வழங்கலாம்.
பல ஆராய்ச்சியாளர்கள் AI பயன்படுத்தி வரி குதிரைகள், வொயிட் ரைனோ மற்றும் பாராகீட் போன்ற விலங்குகளின் தொடர்புகொள்ளும் வடிவமைப்பை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். இதன் மூலமாக மனிதர்களின் மொழி திறன் எவ்வாறு உருவானது என்பது குறித்த தகவல்கள் நமக்கு கிடைக்கலாம்.என்கின்றனர்.