வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்கள் சட்டத்துக்கு எதிரானதாக அமையும் பட்சத்தில் அவை தொடர்பில் பாராபட்சமின்றி குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வடக்கு, கிழக்கு மாகாண பொலிஸ் பிரதானிகளுக்கு பொலிஸ் மா அதிபரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
வடக்கு,கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) எழுச்சியுடன் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர்.
இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சிப்பவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த விடயம் உள்ளிட்ட உரிய பணிப்புரைகள் மாகாண பொலிஸ் பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சட்டத்துக்கு எதிரான முறையில் நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
ஆகவே இவ்விதமான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் சட்டத்தினை மீறும் போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.