நீர் கட்டணத்திற்கான சூத்திரத்தை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (27) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், தண்ணீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரசு-தனியார் கூட்டாண்மையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், தண்ணீரை விற்கும் அல்லது தனியார்மயமாக்கும் எண்ணம் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
உத்தேச நீர் கட்டண சூத்திரத்தின் இறுதி வரைவு டிசம்பரில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு நியாயமான விலையில் தண்ணீர் வழங்கப்படும் என்றார்.
நீர் கட்டண சூத்திரம் எவ்வாறு வர்த்தகத்தை பாதிக்கிறது என்பது தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.