கிழக்கு மாகாணத்தில், டெங்கு தொற்று அதிகரித்த பிரதேசமாக மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தொடர்ச்சியாக டெங்குப் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏறாவூர் சுகாதாரத்துறை ஊழியர்களுடன் பொலிஸார் மற்றும் நகர சபை ஊழியர்களும் வீடுவீடாகச் சோதனை செய்யும் நடவடிக்கையில் இணைந்துள்ளனர்.
ஐந்நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சோதனை செய்யப்பட்டன. டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏற்ற வகையில் சூழலைப் பேணியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஏறாவூர் பிரிவு 3 மற்றும் பிரிவு 3ஏ ஆகிய பகுதிகளிலிருந்து அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.