கடந்த 2023.11.24 அன்று வாகரை கண்டலடி துயிலுமில்லம் சேதமாக்கப்பட்டதன் பின்னணியில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியனும் அவரது ஆதரவாளர்களுமே காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வாகரை பிரதேசத்தில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வாகரை மக்களே விழித்தெழுங்கள்!
கடந்த 2023.11.24 ஆம் திகதியன்று நள்ளிரவு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளமை நாம் அறிந்த விடயமாகும்.
இச் சம்பவமானது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனது ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவமாகும். குறிப்பாக அப்பிரதேசத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளர் அண்ணாத்துரை ரகுகரன் (ரகு) என்பவரது தலைமையில் சாணக்கியனது வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டதொரு நாடகமாகும்.
இச் செயல்பாட்டினை மேற்கொண்டு விட்டு ஊடகங்கள் வாயிலாக நற் பெயரை பெறுவதுடன் தனது அரசியல் இலாபத்தை அடைவதற்காக இவ்வாறான ஈனத்தனமான செயலில் ஈடுபட்ட நடவடிக்கையாகும். தற்போது மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் செயல்பாட்டாளராக செயற்பட்டு வரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஆதரவாளர்களையும் தமிழ் தேசிய மக்கள் முண்ணணி ஆதரவாளர்களையும் அவர்களது அரசியல் செயற்பாட்டையும் தடுப்பதற்கான இலங்கை தமிழரசு கட்சியின் நன்கு திட்டமிட்ட நிலைப்பாடாகும்.
எல்லாவற்றையும் செய்து விட்டு நல்ல மனிதனாக இன்று வாகரைக்கு வந்து மக்களுக்கு ஒரு முகமும் மாவீரர்களுக்கு ஒரு முகமும் காட்டி விட்டு சென்றுள்ளார். இதேவேளை விரைவில் இச் செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மாவீரர்களின் பெற்றோர்களுக்கும் மறைமுகமாக தாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளனர். எனவே மாவீரர் பெற்றோர்களே ஆதரவாளர்களே இதில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
வாகரை பிரதேச கல்விமான்கள் புத்திஜீவிகள்
ஆனால் இத் துண்டுப்பிரசுரத்தின் நோக்கம் எப்படியாவது மாவீரர்களின் பெற்றோர்களை நினைவேந்தல் நிகழ்வுக்கு போகாமல் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டு வெளியிடப்பட்டிருப்பதால் அதன் பின்னணியில் வேறு சில சக்திகளும் அரசியல் அதிகாரம் படைத்தவர்களின் கரங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது.