“அரசின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மாபெரும் கண்டனப் போராட்டத்தை கட்சி பேதமின்றி நாம் அனைவரும் ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டும் என்று உத்தர லங்கா கூட்டணியின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் கூறுகையில்,”சர்வதேச நாணய நிதியத்தில் தஞ்சமடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசு, ‘இப்போது அரசு வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதே எமது முதல் கட்டளை’ எனக் கூறி நாட்டின் அனைத்து பொருளாதார நிலையங்களையும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.
அதற்கு எதிரான பொதுச் செயற்பாடுகளை நசுக்கப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்த அரசு முற்படுகின்றது.இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்கள், தேசிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து பொது நடவடிக்கைகளும் இந்தப் பாரபட்சமான நடவடிக்கைக்கு எதிராக ஒற்றுமையுடன் போராட வேண்டும்.
இந்த நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள், தேசிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நாம் ஒன்றைக் கூறுகின்றோம், இஸ்ரேல் ஜனாதிபதி கொண்டுவந்த அடக்குமுறை சட்டத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எழுந்து நின்றது போல், இந்தத் தீய நடவடிக்கைக்கு எதிராக நாம் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.
அதற்காக நாம் அனைவரும் நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் மாபெரும் கண்டனப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்.” என்றார்.