மட்டக்களப்பு விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட சென்ற பெண் மற்றும் கேக்கை விற்பனை செய்த ஆண் உட்பட இருவரையும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் குறித்த பெண்ணை சட்டவைத்தியரிடம் உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாவற்குடாவில் வசித்துவரும் பாலிப்போடி உதயகுமாரி என்ற பெண் சம்பவதினமான கடந்த 26ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்தநாளையிட்டு நகரத்திலுள்ள பேக்கரி ஒன்றில் பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வே.பிரபாகரன் அண்ணா தலைவர் என பெயரை இட்டு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.
மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை நோக்கி நடந்து சென்றபோது தலைவரை காட்டி கொடுத்து விட்டார்கள் என சத்தமிட்டு சென்ற நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து புலனாய்வு பிரிவினர் அவரை பின் தொடர்ந்து துயிலும் இல்லம் சென்ற நிலையில் பொலிஸாருடன் இணைந்து கைது செய்தனர்.
மேலும் கேக் விற்பனை செய்த பேக்கரியில் கடமையாற்றிவரும் நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்னை தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட முயற்சித்த குற்றச்சாட்டிலும் அவருக்கு உதவிபுரிந்த குற்றச்சாட்டில் பேக்கரியில் கடமையாறி வந்து கேக்விற்பனை செய்தவர் உட்பட இருவருக்கும் எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இருவரையும் எதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பெண்ணை மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரா என கண்டறிய சட்டவைத்தியரிடம் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.