மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு மரணித்த ஆரையம்பதி,
பாலமுனையைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பாக விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பாலமுனை வைத்தியசாலை வீதியில் வசித்து வரும் மர்சூக் பாத்திமா மல்சா (16) எனும்
இந்தச் சிறுமி, வயிற்றவலி காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த
30.03.2023 வியாழக்கிழமையன்று அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதாகத் தெரிவித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து,
சிறுமி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இதன் பின்னர், முதலாம் திகதி சனிக்கிழமை சிறுமியின் சடலம் அவரது பாலமுனையிலுள்ள வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை குடும்பத்தினர் மேற்கொண்டிருந்த போது, சிறுமியின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக காத்தான்குடி பொலிஸாருக்கு தெரிய வந்ததையடுத்து, பொலிஸார் சடலத்தை மீண்டும் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயன சிறியின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.
ரஹீம் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட
வைத்திய அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார். இதையடுத்து பிரேத பரிசோதனையின் பின்னர் செவ்வாய்க்கிழமை(04) சிறுமியின் சடலம் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டு, அன்றையதினமே பாலமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ரஹீம்
தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இந்தச் சிறுமிக்கு சத்திர சிகிச்சை செய்த வைத்தியர்களிடமிருந்து வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சிறுமி இந்தக் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை எனவும் தெரிய வருகின்றது. இந்தச் சம்பவம் அப்பிரதேசத்தை பெரும் சோகத்துக்கு உள்ளாக்கியுள்ளது.