ஊவா மாகாணத்தில் மிகவும் பழமையான முருகன் ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் பதுளை மாவட்டம் ஹாலி எல ரொசட் 2ஆம் பிரிவு அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன பஞ்சகுண்ட பட்ஸ மகா கும்பாபிசேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஹாலி எல ரொசட் 2ஆம் பிரிவு அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானம் மிகவும் பழமையானதுமான சிறப்புமிக்க ஆலயமாகவுமுள்ள இந்த ஆலயமானது இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையுடன் அகிலன் பவுண்டேசன் முழுமையாக அமைத்து வழங்கியுள்ளது.
வருடாந்த கும்பாபிசேகத்தின் கிரியைகள் 29ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு பிரதிஸ்டா விபுலாமணி வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் இந்த கும்பாபிசேகம் நடைபெற்றது.
நேற்று காலை விநாயக வழிபாடு, புண்யாகவாசனம், துவஜபூஜை, கும்பபூஜை, பஞ்சாகினி வழிபாடு,தீபாராதனை நடைபெற்று பிரதான கும்பம் உட்பட கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலஸ்தானம் மற்றும் பரிபாலன தெய்வ ஆலயங்கள் கும்பாபிசேகம் செய்யப்பட்டதுடன் மூலமூர்த்தியாகிய கதிர்வேலாயுத சுவாமிக்கும் கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.
ஆதனை தொடர்ந்து தேவதா பூஜை,ஸராகுதி எஜமான் அபிஸேகம்,தசமங்கள தர்ஸசனம்,மகா அபிசேகம்,அலங்கார பூஜை என்பன நடைபெற்றது.
கும்பாபிசேக கிரியைகளினையும் ஆலயத்தினை முழுமையாக அமைப்பதற்குமான அனுசரணையினை வழங்கியிருந்த இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய தலைவரும் அகிலன் பவுண்டேசன் ஸ்தாபக தலைவருமான மு.கோபாலகிருஸ்ணன்,அகிலன் பவுண்டேசனின் இலங்கைக்கான பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் கும்பாபிசேகத்திற்காக முழுமையான உதவியை வழங்கியமைக்காக இருவரும் கிராம மக்களினால் கௌரவிக்கப்பட்டனர்.
நேற்று விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் பக்தர்களுக்கான அன்னதானமும் வழங்கிவைக்கப்பட்டதுடன் இதன்போது பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸினால் ஆலயத்திற்கு ஒலிபெருக்கிகள் வழங்கிவைக்கப்பட்டது.
யாரும் கவனிப்பாரற்ற நிலையிலிருந்த தமக்கு குறித்த ஆலயத்தினை அமைத்து தந்த இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயம்,அகிலன் பவுண்டேசனுக்கு தோட்டமக்கள் நன்றி தெரிவித்தனர்.