சுகாதார வல்லுநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தற்போது நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. உரிய நேரத்தில் உரிய தீர்வுகளை வழங்காமல் புறக்கணித்தமையினால் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைகளினால் தற்போது நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மூடப்படும் அபாய சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடந்த சனிக்கிழமை அரச மருத்துவ அதி காரிகள் சங்கம் சந்தித்த பின்னர் இது தொடர்பான அபாய எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
எதிர்வரும் மாதங்களில் கிட்டத்தட்ட 400 மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவப் பிரிவுகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத் துவர் ஹரித் அலுத்கே தெரிவித்துள்ளார்.
வருடாந்த சுகாதார அறிக்கை – 2020 இன் படி, தற்போது செயற்படும் அரச மருத் துவமனைகளின் எண்ணிக்கை 646 ஆகும். அவற்றில் 400 மூடப்படுவது ஒரு தீவிர சமூகப் பிரச்சினை.
மேலும் 5000-க்கும் அதிகமான மருத் துவர்கள் விரைவில் நாட்டை விட்டு வெளி யேறவுள்ளதாகவும், இது சுகாதாரத்துறையில் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்து வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதாரத்துறை தொடர்பான முடிவெடுக்கும் செயல்முறையின் சீர்குலைவு மற்றும் அதிக வரிச்சுமை போன்ற பல பிரச்சினைகள் காரணமாக கிட்டத்தட்ட 1,500 மருத்து வர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் பல மருத்துவமனைகளை மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் அலுத்கே குறிப்பிட்டார். அதன்படி, 20 மருத்துவமனைகள் மூடப்பட்டு 44 மருத்து வமனைகள் அரசு பட்டதாரி மருத்துவர் இல்லாமல் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களால் நடத்தப்படுகின்றன என்றார்.
அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் 400-க்கும் அதிகமான மருத்துவமனைகள் மற்றும் பிரிவுகள் மூடப்படும் அபாயத் தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே மூடப்பட்டுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் வட மாகாணத்தின் மாவட்டங்களிலும் புத்தளம் மற்றும் நுவ ரெலியா போன்ற மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.
பல மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் வெளிநாடு செல்வதற்கான சகல தேவைகளையும் ஏற்கனவே பூர்த்தி செய்துள்ள நிலையில், அந்த மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் நிலைமை மேலும் மோசமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.