மிக்ஜாம் புயல் கரையை கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் வரை பொதுமக்கள் வெளியில் வராமல் இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவித்துள்ளார்.
2015 க்கு பிறகு மிக அதிக அளவில் சென்னையில் இப்போது மழை பெய்து வருவதுடன் இன்று (4.12.2003) பிற்பகல் இது அதி தீவிர புயலாக உருவெடுக்கும் சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிக்ஜாம் புயலானது டிசம்பர் 5 ஆம் திகதி கரையைக் கடக்கும் போது சென்னையில் தரைக்காற்று மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய தலைவர் எச்சரித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் நாளை (5.12.2023) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெய்து வரும் கனமழையினால் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
மேலும், முக்கிய ஏரிகளின் நீர் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கரையோரம் வசிக்கும் மக்கள் வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே பல இடங்களில் கரையின் அருகில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் நாளை தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலான சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், சென்னையின் முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறன.
துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பாக்கம் துறைமுகங்களில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சில இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் பெய்து வரும் கனமழையினால், சென்னை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மற்றும் வருகை சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், 150 விமான சேவைகள் வரை சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.