மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கோட்டை முனை மற்றும் கல்லடி ஆகிய பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் நேற்று புதன்கிழமை மாலை (6) சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எல்.லதாகரனின் வழிகாட்டலில் ஹோட்டல்கள், பேக்கரிகள், பலசரக்கு கடைகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பு மேற்கொண்டு பரிசோதனை நடாத்தினர்.
இதன் போது மனித பாவனைக்குதவாத, காலாவதியான,லேபல் ஒட்டப்படாத பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றை விற்பனை செய்த 11 வர்த்தகர்கள் மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.