நல்லிணக்க செயல்முறைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
குறித்த சந்திப்பில் வரலாற்று தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டவற்றை அடிப்படையாக கொண்டு சமூக நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் பன்மைத்துவ இலங்கையை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் உலக தமிழர் பேரவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேசிய சமாதான பேரவையுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதேவேளை வடக்குக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளை சந்தித்து நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளனர்.
புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது.
குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் பின்னர் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை, இலங்கையின் உள்ளக அபிவிருத்தி திட்டங்களுக்குள் உள்வாங்கும் இலக்கினை ஜனாதிபதி ரணில் துரிதப்படுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் அதற்கானதொரு அலுவலகத்தை ஜனாதிபதி ரணில் ஸ்தாபித்துள்ளார்.
அந்த அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகமாக இலங்கையின் மூத்த இராஜதந்திரிகளின் ஒருவரான வீ.கிருஸ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அலுவலகத்தின் ஊடாகவே உலக தமிழர் பேரவை அரசாங்கத்தை அணுகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2023/12/image-17.png)