இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் புதிய முனையமொன்றை நிர்மாணிப்பதற்காக 553 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதியுதவியும் கிடைக்குமென்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தின் போதே இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இந்த அரசாங்கத்தின் கீழ் வெளிநாடுகளுடனான உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அண்மை காலத்தில் அண்ணளவாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வரையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இந்தியா, அதானி நிறுவனத்துடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் புதிய முனையமொன்றை நிர்மாணிப்பதற்காக 553 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேசத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது வெளிநாட்டு கொள்கையை காட்டிக்கொடுத்தது இல்லை.
இலங்கையின் கப்பல் போக்குவரத்து இடம்பெறும் வழித்தடத்தை மாற்றியமைப்பதற்கு ஒருசில சர்வதேச நிறுவனங்கள் ஒன்றிணைந்து கோரியிருந்தன. அதன் பின்னணியில் பூகோள அரசியல் இருந்தது என்பதை நாங்கள் அறிவோம்.
காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களின் பெறுமதியை குறைப்பதற்காகவே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன்போது, எகிப்து, அல்ஜீரியா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் அந்த கோரிக்கைகளை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம்.
இதற்கு முன்னர் எடுத்த தீர்மானங்களில் மாற்றமில்லாமல் அவற்றை யதார்த்தமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கிடைத்துள்ள வெற்றியே எமது அர்ப்பணிப்புக்கு கிடைத்த சாதகமாகும்.
சர்வதேச நாணயத்தின் முதலாவது கடன் உதவியை பெற்றுக்கொண்டுள்ளோம். எதிர்வரும் வாரங்களில் இரண்டாம் கட்ட நிதியுதவியையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
எனவே நாங்கள் சரியான பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்கிறோம்” எனத் தெரித்துள்ளார்.