நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில், இலங்கை மின்சார சபையும், மின்சார அமைச்சும் இணைந்து இருவேறு விசாரணைகைள நடத்தவுள்ளன.
இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்றைய(10) நாடாளுமன்ற விவாதத்தின் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்றைய திடீர் மின் தடை குறித்து இன்று பிற்பகல் விளக்கமளிக்கவுள்ளார்.
நாடளாவிய ரீதியில் நேற்று மாலை ஏற்பட்ட மின் தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று மாலை 05.10 மணியளவில் நாடு முழுவதும் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
இலங்கை மின்சார சபை ஏற்பட்ட சிக்கல்களை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டதுடன், நேற்று இரவு 11 மணியளவில் நாடு முழுவதும் மீண்டும் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாட்டைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.