மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் நாளாந்த பாவனைக்குத் தேவையான நலன்புரி உபகரணங்கள் அடங்கிய பொருட்களை கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண நேற்று கையளித்துள்ளார். 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான நலன்புரி உபகரணங்கள் அடங்கிய பொருட்கள், 14 பொலிஸ் நிலையங்கள், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம், மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் ஆகியவற்றிற்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிரதி போலீஸ் மா அதிபர் என்.பி.லியணகே உட்பட பொலிஸ் உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண இவ்வாறு குறிப்பிட்டார். ‘தற்போது அதிகளவிலான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. அவற்றைப் பொலிஸார் கட்டுபடுத்த வேண்டும். பண்டிகைக் கொண்டாட்ட கால பகுதியில்
அதிகளவில் வன்முறைகள், கொள்ளைச் சம்பவங்கள் என பாரிய குற்ற செயல்களும் இடம்பெறுகின்றன. அவற்றினையும் கட்டுப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும்’ என்றார்.